search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: மு.க.ஸ்டாலின் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு
    X

    நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: மு.க.ஸ்டாலின் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

    ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 13-ந்தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் பங்கேற்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

    மாவட்டம் தோறும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாம்பரத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தாம்பரம் சண்முகம் சாலையில் மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளரான எனது தலைமையில் (தா.மோ. அன்பரசன்) தலைமையில் நடைபெறுகிறது.

    இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, த.மு.மு.க. உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அனைவரையும் தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர். ராஜா எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

    இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தீர்மானகுழு உறுப்பினர் வைத்தியலிங்கம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி, மதுசூதனன், சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், முன்னாள் எம்.பி. விசுவநாதன், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்பதால் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் அணி அணியாக திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு தா.மோ. அன்பரசன் கூறி உள்ளார்.

    Next Story
    ×