search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோட்டில் உள்ள வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அமைச்சரின் பினாமி
    X

    திருச்செங்கோட்டில் உள்ள வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அமைச்சரின் பினாமி

    திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அமைச்சரின் பினாமி, 45 சதவீத பணத்தை அபராதமாக கட்டியதால் நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

    சேலம்:

    பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து செல்லாத பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. நிறைய பேர் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்து புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

    பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை தாமாக முன்வந்து கணக்கு காட்டினால் அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்தது.

    இதற்காக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தையும் அறிவித்தது. இந்த திட்டத்தின்படி தாமாக முன்வந்து கணக்கு காட்டியவர்களுக்கு 45 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. 25 சதவீத பணம் மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. மீதி உள்ள பணத்தில் 4 ஆண்டுகளுக்கு வருமானவரி பிடித்தம் போக 16.5 சதவீத பணம் மட்டுமே 4 ஆண்டுக்கு பிறகு திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்திபடி நிறையபேர் தாமாக முன்வந்து கணக்கில் காட்டாத கறுப்பு பணமான செல்லாத ரூபாய் நோட்டுகளை பாங்கியில் செலுத்தினர்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 200 தனி நபர்கள் ரூ.600 கோடி வரை டெபாசிட் செய்து இருந்தனர்.

    இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ரூரல் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு தனி நபர் ரூ.246 கோடியை டெபாசிட் செய்து இருந்தார்.

    அவரிடம் வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிரதான் மந்திரி கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் தனது தவறை ஒப்புக்கொண்டு இந்த பணத்தில் 45 சதவீதத்தை அபராதமாக செலுத்துவதாக அறிவித்தார். மேலும் 25 சதவீத பணத்தை அரசு திட்டங்களில் எந்தவித வட்டியும் வாங்காமல் முதலீடு செய்வதாகவும் அறிவித்தார்.

    மீதி உள்ள தொகையில் வருமானவரி கட்டியதுபோக 16.5 சதவீத தொகை மட்டும் 4 ஆண்டுக்கு பிறகு அவருக்கு திரும்ப கிடைக்கும். இந்த பணத்தை டெபாசிட் செய்தவர் அமைச்சரின் பினாமி என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயரை வெளியிட வருமானவரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    இதேபோல சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாள் சோதனை நடத்தி பல நூறு கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த பணமும் வருமானவரி கணக்கில் சேர்க்கப்பட்டு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 28 ஆயிரம் வங்கி கணக்குகளை வருமானவரித்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 441 பேர் ரூ.240 கோடி வரை டெபாசிட் செய்தது தெரியவந்தது. சிலர் ரூ.85 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தது தெரியவந்தது. 28 ஆயிரம் பேரில் 27 ஆயிரத்து 739 பேருக்கு விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் 18 ஆயிரத்து 220 பேர் பதில் அனுப்பி இருந்தனர்.

    அவர்கள் அனுப்பிய பதில் திருப்தி இல்லாததால் மீண்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது தவிர ரூ. இரண்டரை லட்சத்துக்கு மேல் செல்லாத ரூபாய் நோட்டுகளை பாங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பட்டியல்களையும் வருமான வரித்துறையினர் வாங்கி அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இப்படி இரண்டரை லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இதையும் வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×