search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பேச்சை குறைத்து செயலில் இறங்கிவிட்டோம் - வேலூரில் முதல்வர் பேச்சு
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பேச்சை குறைத்து செயலில் இறங்கிவிட்டோம் - வேலூரில் முதல்வர் பேச்சு

    வேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பேச்சை குறைத்து செயலில் இறங்கி விட்டோம் என தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பேச்சை குறைத்து செயலில் இறங்கி விட்டோம் என தெரிவித்துள்ளார்.

    வேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவை தலைவர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

    தமிழகத்தில் அ.தி.மு.க. மட்டும் தான் 27 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம் வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் “அ.தி.மு.க.வின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும்” என்று பேசினார். அவரது முழக்கத்தை மெய்யாக்கும் வகையில் கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த இயக்கத்தையும், அரசையும் கட்டிக் காக்கும் விதமாக செயல்பட வேண்டும்.

    இந்திய விடுதலைக்கு வேராகத் திகழ்ந்த இந்த வேலூர் மண், வீரத்திருமகன்களைப் பெற்ற தியாகத் திருநகராக திகழ்வதை
    உலகம் அறியும். நாட்டுக்காக உழைத்த நல்லவர்களைப் போற்றும் பொன்மனம் கொண்ட தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இங்கே கொண்டாடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

    தியாகி ஜீவாவுக்கு தாம்பரத்தில் வீடு கட்டித் தந்தவர் எம்.ஜி.ஆர். அனைத்து கோயில்களிலும் சமபந்தி விருந்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

    இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 540 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 39 ஆயிரத்து 951 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தியாவிலேயே தொழில் துறையில் அந்நிய நேரடி முதலீடு ஈர்ப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணி மாநிலமாக திகழ்வது தமிழகம். அனைத்துத் துறைகளைக் காட்டிலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முன்னோடி மாநிலமாக திகழ்வது தமிழகம்.

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 34 ஏரிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 250 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, குடிநீர்த் தேவையினை முழுமையாக தீர்க்கும் வகையில் திருவண்ணாமலை - வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வாணியம்பாடி வட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணையை சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கண்டு களித்து இன்புறும் வகையில் சுற்றுலா தலமாக மேம்பாடு செய்யப்படும்.

    மாதனூர் ஒன்றியம் பாலூரில் புதியதாக திறக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு  புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும்.

    எட்டாத கனிக்கு ஏப்பம் விடுபவர்கள் ஆசையை மட்டும் மனதில் வளர்த்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. வாய் ஜம்பம் பேசிக்கொண்டிருப்பவர்களை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் இறங்கியிருக்கும் எங்களைப் பார்த்தாவது அவர்கள் திருந்தவேண்டும்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களும் விட்டுச்சென்ற பணியை இன்றைக்கு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சில பேர் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்
    Next Story
    ×