search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி
    X
    வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்தது சி.எம்.சி.

    நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் வேலூர் சி.எம்சி.நிர்வாகம் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு 99 ஆண்டுகள் ஆகிறது. தற்போது 100-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. புகழ் பெற்ற இந்த மருத்துவ கல்லூரி நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வுக்கு நாங்கள் எதிர்ப்பானவர்கள் அல்ல. அதே நேரம் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு ஐடா ஸ்கடர் அம்மையாரின் வழிகாட்டுதலின் பேரில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம்.

    மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் பாதி அவர்களுக்கும், மீதி மாநிலத்துக்கும் சீட் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதற்கு சி.எம்.சி. நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை.

    மேலும், பெண்கள் 50 சதவீதத்துக்கு மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மிஷினரி மருத்துவமனைகளில் பணியாற்ற இருக்கின்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். எங்களின் சமூக நீதி கொள்கைக்கு அனுமதி தரவேண்டும் என்று சி.எம்.சி. தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு அரசு தரப்பு வக்கீல், ஒருவேளை சமூக நீதிக்கு உட்படாத வகையில் சட்டம் வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்படி ஒரு வேளை சொல்லி விட்டால் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த மாட்டோம். எங்களுக்கென்று தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். எங்களின் தனித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு தரப்பு வாதத்தையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு அக்.11-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது. அதுவரை சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கை நடத்தாமல் இருந்திருந்தால் மத்திய அரசு வேறு முடிவை எடுத்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

    இது குறித்து சி.எம்.சி. அலுவலர் ஒருவர் கூறியதாவது:-


    வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். மற்றும் 61 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். நீட் தேர்வை சி.எம்.சி. எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சி.எம்.சி. நிர்வாகம் ஒரு இன்டர்வியூ நடத்தும். அந்த இன்டர்வியூவில், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவருக்கு தலைமை பண்புகள் இருக்கிறதா? கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் மனப்பான்மை உள்ளதா என்பது போன்ற பல கேள்விகள் கேட்போம். இந்த இன்டர்வியூ 3 நாட்கள் நடக்கும். சி.எம்.சி. நடத்தும் இந்த இன்டர்வியூக்கு அனுமதி தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுள்ளோம் என்றார்.

    சி.எம்.சியில் ஆண்டுக்கு 100 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கும், 61 முதுநிலை சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறும்.

    நீட் தேர்வு கெடுபிடியால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 161 புதிய சேவை மனப்பான்மையுடன் திகழக்கூடிய டாக்டர் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×