search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் ஏரி நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம்
    X

    கொடைக்கானல் ஏரி நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம்

    கொடைக்கானல் ஏரி நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப் போது மழை பெய்து வந்தது. கொடைக்கானல், நத்தம் ஆகிய பகுதிகளில் மட்டும் அதிக அளவு மழை பெய்து வருகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. நேற்று பகலில் கடுமையான வெப்பம் நிலவிய நிலையில் மாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

    இதனால் நட்சத்திர ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. 36 அடி உயரம் உள்ள இந்த ஏரியில் தற்போது 35 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும் ஏரிக்கு தண்ணீர் வரும் பகுதிகளான ஜிம்கானா, பிரையண்ட் பார்க் ஓடை, பாம்பே சோலை ஓடை ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் விரைவில் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் நட்சத்திர ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கொடைக்கானல் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் பகுதிகளான பர்ன்ஹில் ரோடு, கங்கா காம்பவுண்ட், அன்னை தெரசா நகர், டோபிகானா, வெள்ளி நீர்வீழ்ச்சி ஓடை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் தண்டோரா மூலம் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வரலாம் என்பதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×