search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் மது பாட்டிலில் வி‌ஷ பூச்சி குடி மகன்கள் அதிர்ச்சி
    X

    டாஸ்மாக் மது பாட்டிலில் வி‌ஷ பூச்சி குடி மகன்கள் அதிர்ச்சி

    ஆரணியில் டாஸ்மாக் மதுபான பாட்டிலில் வி‌ஷ பூச்சி மிதந்ததை கண்ட மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடுகசாத்து கிராமத்தில் தேவிகாபுரம் சாலையோரம் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், நேற்றிரவு 7 மணியளவில் ஒரு மதுபிரியர் மதுபானம் வாங்குவதற்காக சென்றார்.

    88 ரூபாய் மதிப்புள்ள ‘பிளாக் பியரல்’ என்கிற பிராந்தி வகை மதுபான பாட்டிலை பணம் கொடுத்து வாங்கினார். ‘சைடிஸ்’ வாங்கி கொண்டு பாருக்குள் குடிக்க சென்றார். பிராந்தி பாட்டிலை திறக்க முயன்ற போது, அதற்குள் ஒரு ‘வி‌ஷ பூச்சி’ மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து, மூடியை திறக்காமல், அந்த குடிமகன் பிராந்தி பாட்டிலை டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கொண்டு சென்று காண்பித்தார். அதற்கு ஊழியர்கள், ‘‘பூச்சியை எடுத்து கீழே வீசி விட்டு மதுபானத்தை குடி, உயிர் போகாது’’ என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.

    டாஸ்மாக் ஊழியர்களின் பதிலால் ‘கடுப்பாகிய’ மது பிரியர்கள் ஏராளமானோர் டாஸ்மாக் ஊழியர்களை முற்றுகையிட்டு அதட்டினர். வி‌ஷ பூச்சி இருக்கும் மது பாட்டிலை கொடுத்து விட்டு குடித்தால் உயிர் போகாது என்று அலட்சியமாக பதில் அளிப்பதா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

    இதனால், மிரட்சிக்குள்ளான ஊழியர்கள் அமைதி காத்தனர்.

    இதுகுறித்து மது பிரியர்கள் கூறுகையில், மது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும், நாங்கள் கூலி வேலைக்கு செல்வதால், உடல் வலியை தாங்கி கொள்ள முடியாமல், மது குடிக்கிறோம்.

    அதிலும், இதுபோன்ற பூச்சி கிடந்தால் நாங்கள் என்ன செய்வது.

    காசு கொடுத்து வாங்கிய மதுவில் பூச்சி இருப்பதை கவனித்து, டாஸ்மாக் ஊழியர்களிடம் திருப்பி கொடுத்து, வேறு மதுபான பாட்டிலை கேட்டால் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

    எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீதும், மதுவில் பூச்சி இல்லாமல் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×