search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்கன்வாடி பணியாளர் நேர்காணலுக்கு வந்த பெண்கள் தர்ணா போராட்டம்
    X

    அங்கன்வாடி பணியாளர் நேர்காணலுக்கு வந்த பெண்கள் தர்ணா போராட்டம்

    பெரம்பலூரில், இரவு வரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்தாததால் காலை முதல் காத்திருந்த பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், காலியாக உள்ள 45 அங்கன்வாடி பணியாளர்கள், 58 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 109 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேர்காணலில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது குழந்தைகள், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி தலைமையில் குழுவினர் நேர்காணல் நடத்தினர்.

    ஆலத்தூர் வட்டாரத்துக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடத்தப்பட்டு வந்த நிலையில், இதர வட்டாரங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இரவு 7½ மணி வரை நேர் காணல் நடத்தப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த பெண்கள் காலதாமதத்தை கண்டித்தும், தங்களுக்கும் நேர்காணல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கலெக் டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைஅறிந்த அரசு அலுவலர்களும், பெரம்பலூர் போலீசாரும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நேர்காணலில் பங்கேற்பதற்காக காலையில் இருந்து இரவு வரை காத்திருந்த நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் கனிமொழி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
    Next Story
    ×