search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஒரே மேடையில் பேசுகிறார்கள்
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஒரே மேடையில் பேசுகிறார்கள்

    வண்டலூர் அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரே மேடையில் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    காஞ்சீபுரம்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடக்கிறது. இதையொட்டி காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விழா நடைபெறும் இடத்தில் குவியத் தொடங்கினர்.

    விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு படப்பையில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷங்கள் மற்றும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கொடி கம்பத்தில் கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து காஞ்சீபுரம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் தேரடியில் மலர் அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பூச்செண்டு அளித்தும், பொன்னாடை போர்த்தியும் முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

    பின்னர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய நில அளவீட்டு அலுவலக கட்டிடத்தினையும், ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கல்வெட்டினையும் திறந்து வைத்து அ.தி.மு.க. கொடியினை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

    முன்னதாக காஞ்சீபுரம் மாவட்ட எல்லையில் கலெக்டர் பொன்னையா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார்.

    நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளி நாயகம், காஞ்சிபன்னீர் செல்வம், தும்ப வனம் ஜீவானந்தம், அக்ரி நாகராஜன், டி.தணிகைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி படப்பையில் இருந்து ஓரகடம், வாலாஜாபாத், கலெக்டர் அலவலக சாலை மற்றும் ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் வழிநெடுகிலும் அதிமுக கொடிகளுடன் தோரணங்களும், பிரம்மாண்ட அலங்கார வளைவுகளும், வண்ணப்பதாகைகளும் அமைக்கப்பட்டிருந் தன.

    இன்று மாலை கிளாம் பாக்கத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி கிளாம்பாக்கம் பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×