search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விபரீத முடிவு எடுக்கக்கூடாது: மாணவர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை
    X

    ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விபரீத முடிவு எடுக்கக்கூடாது: மாணவர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை

    ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமாக முடிவை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை கூறி உள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருத்திகா தாக்கல் செய்த மனுவில், ‘மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த நான் பிளஸ்-2 தேர்வில் 1,184 மதிப்பெண் பெற்றுள்ளேன். ‘நீட்’ தேர்வில் 154 மதிப்பெண் பெற்றுள்ளேன். ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு நடக்குமா? என்ற குழப்பத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தை வாங்காமல் இருந்து விட்டேன். எனவே, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு, மருத்துவ படிப்பில் ஒரு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு முறையான பயிற்சியினை தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் பிளஸ்-2 பொது தேர்வில் ஆயிரத்து 184 மதிப்பெண் பெற்று, டாக்டராக வேண்டும் என்ற மனுதாரரின் கனவு, கனவாகவே ஆகிவிட்டது. ‘நீட்’ தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு, அவர் 154 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்த நீட் தேர்வில் மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை விட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளது பத்திரிகைகளில் வெளியான செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.

    மொத்தம் 3,382 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1,310 இடங்களை தட்டிச் சென்றுவிட்டனர். வெறும் 2,220 இடங்கள் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிலும், 943 மாணவர்கள், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் ஓர் ஆண்டாக ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

    ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஆரம்பத்திலேயே நிராகரித்து இருந்தால், இவ்வளவு பெரிய குழப்பமும், பிரச்சினையும் ஏற்பட்டு இருக்காது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழக அரசும், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரிய அதேநேரம், அந்த தேர்வுக்காக தமிழக மாணவர்களை தயார்படுத்தி இருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக கல்வித்தரத்தை உயர்த்தாமல், கடைசி நேரத்தில் தான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

    ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவை மீறி வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

    எனவே, மனுதாரரின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    அதேநேரம், ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்து விட்டோம் என்பதற்காக வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று எந்த ஒரு மாணவரும் கருதக் கூடாது. இதற்காக தற்கொலை எனும் கோழைத்தனமான, முட்டாள் தனமான முடிவை மாணவர்கள் எடுக்கக் கூடாது.



    எனவே தமிழக அரசு இனிமேலாவது ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய ஆறுதல் அளிக்கும் வகையில் பிரபலங்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், மனுதாரர் கூறியுள்ளது போல மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
    Next Story
    ×