search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்னாகரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
    X

    பென்னாகரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

    பென்னாகரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்திருப்பது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    ஏரியூர்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த காளிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் சின்னம்பள்ளி அரசு மாதிரிப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சவுந்தர்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது பெரும்பாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று முன்தினம் பெரும்பாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சவுந்தர்யாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா இறந்தார்.

    சவுந்தர்யா சாவு அந்த கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் சுற்று வட்டார பகுதிகளான ராமகொண்டஅள்ளி, நாகமறை, பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்பட பல கிராமங்களில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்கு ராமகொண்டஅள்ளியில் 4வயது சிறுவன் இறந்தான். இந்தநிலையில் சவுந்தர்யா டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×