search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: போலீசார் அறிவிப்பு
    X

    விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: போலீசார் அறிவிப்பு

    கரூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைத்து, பிரதிஷ்டை செய்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க உள்ளது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், பரமத்தி தென்னிலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைத்து, பிரதிஷ்டை செய்து சிலைகளை வரும் 26-ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க உள்ளது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அரவக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் முன்னிலை வகித்தார். பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் கடந்த ஆண்டு எந்த அமைப்பின் சார்பாக மற்றும் பொதுமக்கள் சார்பாக எந்தெந்த இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டதோ, அங்கு மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். களிமண்ணால் சுடாமல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ள சுற்றுச் சூழல் பாதிக்காதவாறு விநாயகர் சிலையில் அனுமதிக்கப்பட்ட வர்ணங்கள் மட்டுமே பூசப்பட வேண்டும்.

    சிலை பாதுகாப்புக்கு பொறுப்பாளர்கள் குழு ஏற்படுத்தி சிலையை பாதுகாக்க வேண்டும். சிலைக்கு பூஜை செய்யும் பூசாரிகள் குறித்த முழு விபரத்தை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். சிலையை எடுத்துச் செல்லும் வழி, கரைக்கும் இடங்களை காவல் துறையினர் முடிவு செய்வார்கள். அனுமதிக்கப்படாத வழியாக சிலைகளை எடுத்துச் செல்லக் கூடாது.

    விநாயகர் சிலை ஊர்வலம் காலை 9 மணிக்கு மேல் 6 மணிக்குள் முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பெட்டி வடிவ ஒலிபெருக்கியை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும்.

    ஊர்வலத்தின்போதும், வழிபாட்டின் போதும் பிற மதத்தினர்களின் மனம் புண்படக் கூடிய வாசகங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின்போது ஜர்ஜ், மசூதி போன்ற இடங்களை கடக்கும்போது ஒலிப்பெருக்கிகளை நீக்கம் செய்தும், கோசம் போடுதல் பஜனை பாடல்களை பாடுவதை நிறுத்த வேண்டும். ஊர்வலத்தின் போது விழா கமிட்டியினரைத் தவிர அன்னியர்கள் அனு மதிக்கக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஹரிகரசுதன், சந்தோஷ்குமார், மணி, பாலகுமாரன் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×