search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 24 அடி உயர்ந்தது
    X

    நெல்லை மாவட்டத்தில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 24 அடி உயர்ந்தது

    நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 24 அடி உயர்ந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழைகள் பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகளில் குறைவான தண்ணீரே உள்ளன. குளங்கள் வறண்டு விட்டன. விவசாயம் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

    தென்காசி,செங்கோட்டை, ஆய்க்குடி பகுதியில் நேற்று கன மழை பெய்தது. அணைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 52.40 அடியாக இருந்தது. இன்று இது 53.40 அடியாக உயர்ந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 441.30 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 457.25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று பெய்த மழையில் ஒரே நாளில் 24 அடி உயர்ந்தது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 16.40 அடியாக இருந்தது. இன்று அணை நீர்மட்டம் 24 அடி உயர்ந்து 40.35 அடியாக அதிகரித்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1126 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 32.68 அடியாக உள்ளது. நேற்று 48.10 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 50 அடியாகி உள்ளது. இதேபோல 58.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் இன்று 61 அடியாக அதிகரித்து உள்ளது. 24.67 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 29.52 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 77.25 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 86 அடியாக அதிகரித்து உள்ளது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியது. அணைப்பகுதியில் அதிகபட்சமாக குண்டாறில் 41 மில்லிமீட்டர் மழையும், தாலுகா பகுதியில் அதிகபட்சமாக தென்காசியில் 22.80 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

    குண்டாறு41, அடவிநயினார்35, தென்காசி22.80, பாபநாசம்21, செங்கோட்டை19, கருப்பாநதி 18, ஆய்க்குடி12.20, சேர்வலாறு11, ராமநதி8, அம்பை5, மணிமுத்தாறு4.2, சேரன்மகாதேவி3, கடனா நதி2, பாளை1.
    Next Story
    ×