search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான் அருகே கோவிலில் உண்டியல்கள் கொள்ளை
    X

    சோழவந்தான் அருகே கோவிலில் உண்டியல்கள் கொள்ளை

    சோழவந்தான் அருகே துர்க்கை அம்மன் கோவிலை உடைத்து உண்டியல்களை திருடிச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேட்டுநீரேத்தானில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் காமாட்சி என்பவர் அர்ச்சகராக உள்ளார். வழக்கம் போல் நேற்று இரவு பூஜை முடிந்ததும் காமாட்சியும், கோவில் ஊழியரும் சேர்ந்து நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். இன்று காலை கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக காமாட்சி வந்தார்.

    அப்போது கோவில் கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஒரு உண்டியலை காணவில்லை. மற்றொரு உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மாயமான உண்டியல் 60 கிலோ எடை கொண்டதாகும். அதை தனியாக ஒருவர் தூக்கிச்செல்ல வாய்ப் பில்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

    கடந்த மாதம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் கணிசமான அளவில் இருக்கும் என்று பக்தர்கள் தெரிவித்தனர். கோவிலின் அருகே 4 சக்கர வாகனம் வந்து சென்றதற்கான தடயம் காணப்படுகிறது.

    எனவே கொள்ளையர்கள் 4 சக்கர வாகனத்தில் வந்து உண்டியல்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து கோவில் நிர்வாகிகள் சுந்தர், சுப்பையா, கணேசன், செல்வராஜ், மூர்த்தி ஆகியோர் சோழவந்தான் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கெள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×