search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி - எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு
    X

    சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி - எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு

    சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார். இதில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் உள்பட பழமையான கார்கள் பங்கேற்றன.
    சென்னை:

    சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார். இதில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் உள்பட பழமையான கார்கள் பங்கேற்றன.

    ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’ சார்பில் பழமையான கார்கள் கண்காட்சி சென்னை திருவான்மியூர் வாசுதேவன் நகரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு மையத்தில் நேற்று காலை நடந்தது.

    இதனையொட்டி மைய வளாகத்தில் காட்சிக்காக நிறுத்துவதற்காக அதிகாலையிலேயே தங்களது பழைய மற்றும் பாரம்பரியமான கார்களை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல பழமையான மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார். அவருடன் ஏவி.எம்.சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து கண்காட்சியில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை ஒவ்வொன்றாக விக்ரம் பிரபு பார்த்து ரசித்தார்.



    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய 1957-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ‘டாட்ஜ் கிங்ஸ்வே’ காரும் (வண்டி எண்: எம்.எஸ்.எக்ஸ்.-3157) வைக்கப்பட்டு இருந்தது. இந்த கார் ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்தியது ஆகும். அதேபோல ‘சிவாஜி’ படத்தில், ரஜினிகாந்த்-ஸ்ரேயா நடித்திருந்த ஒரு பாடல் காட்சியில் இடம்பெற்ற ‘எம்.ஜி-டி.பி. 1939’ கார் இடம்பெற்று இருந்தது.

    மேலும் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் முதல் கார் என்று கூறப்படும் 1938-ம் ஆண்டு தயாரிப்பான ‘வாக்ஸ்ஹால் 14’ கார், ஜெமினி ஸ்டூடியோ நிறுவனரான எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய 1951-ம் ஆண்டு தயாரிப்பான ‘வாக்ஸ்ஹால் வெலாக்ஸ்’ என்ற காரும் இடம்பெற்று இருந்தன.

    தொழில் அதிபரான டி.ஏ.எஸ்.ஜெயராமையா பயன்படுத்தி வரும் 1951-ம் ஆண்டு தயாரிப்பான ‘பக்-பியட்’ (எம்.எஸ்.இசட்.-7990) காரும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    ‘ரோல்ஸ்ராய்ஸ்’, ‘இம்பீரியல்’, ‘கார்டிலக்’, ‘போர்டு’, ‘ஜாக்குவார்‘, ‘மெர்சிடஸ் பென்ஸ்’, ‘ஹெரால்டு’, ‘டாட்ஜ்’, ‘பக்’, ‘செவ்ரெலே’, ‘இந்துஸ்தான் மோட்டார் கமண்டோ’, ‘பியட்’ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட 125 கார்கள் கண்காட்சியில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இதேபோல ‘பி.எஸ்.ஏ.’, ‘ராயல் என்பீல்டு’, ‘டிரையம்ப்’, ‘தி வொல்ப்’, ‘ஜேம்ஸ்’, ‘பென்னோனியா சிஸ்பெல்’, ‘விஜய் சூப்பர்’, ‘லம்பிரட்டா எல்.டி’ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளான 31 பழமையான மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    இதுதவிர ‘ஏர்போர்னே’ நிறுவனத்தின் 1938-ம் ஆண்டு தயாரிப்பான பழமையான சைக்கிள் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கார்களை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதுவரை பழைய சினிமாக்களிலும், போட்டோக்களிலும் மட்டுமே பார்த்திருந்த பழமையான கார்களை, நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டனர். பழமையான கார்கள் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நண்பர்கள், குடும்பத்தினர்கள் என சேர்ந்து நின்று ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.

    தொழில் அதிபர் டி.ஏ.எஸ்.ஜெயராமையாவின் ‘பக்-பியட்’ காரை கண்காட்சிக்கு வந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும் காரின் சிறப்புகள் குறித்து ஜெயராமையாவிடம் கேட்டறிந்தனர். அவரது காரில் அமர்ந்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    சென்னையில் நடக்கும் பழமையான-பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் தவறாது ஜெயராமையாவின் கார் பங்கேற்பது வழக்கம். இதுதவிர ‘எம்.ஜி.’, ‘பிளைமோத்’, ‘ஹெரால்டு’ ஆகிய 3 கார்களையும் ஜெயராமையா பராமரித்து வருகிறார்.

    இதுகுறித்து டி.ஏ.எஸ்.ஜெயராமையா கூறுகையில், இந்த காரை ஓட்டும்போது, எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. மற்றவர்களும் இந்த காரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வார்கள். சிலர் இந்த கார் குறித்து என்னிடம் கேட்டுவிட்டு செல்வதும் உண்டு. பழமையான கார்களின் மீதான இன்றைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகரித்து வருகிறது”, என்றார்.

    கண்காட்சி அணிவகுப்பு நிகழ்ச்சியில், பழமையான கார்களை சிறப்பாக பராமரிப்பு செய்திருக்கும் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது. அதன்படி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கருத்துக்கணிப்பு படி, 1964-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘பியட் - ஸ்பைடர்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் உரிமையாளர் ரஞ்சித் பிரதாப்புக்கு பரிசு வழங்கப்பட்டது.

    அதேபோல சிறந்த மோட்டார் சைக்கிளாக 1929-ம் ஆண்டு தயாரிப்பான ‘தி வொல்ப்’ தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் சுமந்த் செகந்த்க்கு பரிசு வழங்கப்பட்டது.

    Next Story
    ×