search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவை நீக்கினால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்: பழனியப்பன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
    X

    சசிகலாவை நீக்கினால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்: பழனியப்பன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார் என பழனியப்பன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    சென்னை:

    டி.டி.வி. தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 23-ந் தேதி ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளநிலையில், அது குறித்தும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான செந்தில்பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல், சுப்பிரமணியன், சுந்தர்ராஜன், தங்கதுரை, முத்தையா, பாலசுப்பிரமணியன், மாரியப்பன் கென்னடி, ரங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை முடிந்து வெளியில் வந்த எம்.எல்.ஏ. பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மேலூரில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து அடுத்து நடைபெற உள்ள 8 பொதுக்கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அரசை ஊழல் அரசு என்றனர். இப்போது அவர்களுடன் இணைந்து இவர்களும் ஊழல் செய்யப்போகிறார்களா? பதவிக்காகவும், சுயநலத்துக்காகவுமே இந்த இணைப்பு பேச்சுவார்தை நடைபெறுகிறது.

    அம்மா இறந்த பிறகு, கட்சி நலன், ஆட்சி நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார் சசிகலா. அதன்பிறகு மூத்த அமைச்சர்கள் உள்பட மாவட்டம், தொகுதி வாரியாக அனைத்து தலைவர்களும் வந்து சசிகலாவின் காலில் விழுந்து நீங்கள் தான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று கேட்டதால் தான் அவர் பொதுச் செயலாளர் ஆனார்.

    அன்று அவரது முகத்தை பார்க்க தைரியம் இல்லாதவர்கள்தான் இன்று ஏதேதோ சொல்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தவர் சசிகலா. அவரும் இன்று ஏதேதோ சொல்கிறார்.

    அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத போதும், அதை பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2-வது முறையாக இந்த ஆட்சியை பெற்றுத்தந்தார். இந்த ஆட்சி ஒரு பஸ் போன்றது. அந்த பஸ்சை நல்லமுறையில் பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டும் என முதலில் ஒரு ஓட்டுனரை (முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்) நியமித்தோம்.

    ஆனால், அவர் பயணிகளின் எண்ணத்துக்கு ஏற்பவும், சரியான பாதையில் பஸ்சை ஓட்டாததாலும் அவருக்கு(ஓ.பன்னீர்செல்வத்துக்கு) பதிலாக புதிய ஓட்டுனரை(முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி) நியமித்தோம். இந்த பஸ் ஆபத்தான பாதையில் போகக்கூடாது. இந்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அந்த நிலையை அவர்கள் உருவாக்கிவிடக்கூடாது.

    அம்மா உயிரோடு இருந்திருந்தால் மேகதாதுவில் அணைகட்ட அனுமதித்து இருக்க மாட்டார். துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியது போன்று ‘சிலிப்பர் செல்ஸ்’ எம்.எல்.ஏ.க்கள் எங்களோடு தொலைபேசி வழியாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மூலம், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்ற போவதாக தகவல் வந்துள்ளது.

    அப்படி நடந்தால் ஓட்டுனர்(முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி) மாற்றப்படுவார். தொண்டர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி நடைபெறவில்லை என்றால் முதல்-அமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×