search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் நினைவு இல்லமாகும் போயஸ்கார்டன் வீடு
    X
    ஜெயலலிதாவின் நினைவு இல்லமாகும் போயஸ்கார்டன் வீடு

    போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுவது எவ்வளவு நாட்களில் சாத்தியமாகும்?

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படுவது எவ்வளவு நாட்களில் சாத்தியமாகும் என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது.
    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற இல்லத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். இந்த இல்லத்தை 1967-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கினார்.

    நடிகையாக இருந்தபோதே ஜெயலலிதா இந்த வீட்டில் தான் வசித்தார். அரசியல் பிரவேசத்துக்கு பிறகும் தொடர்ந்து அங்கேயே வசித்த ஜெயலலிதா, இடையிடையே சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களுக்கும் சென்று தங்கினார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இரவு 10 மணி வரை, ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் தான் தங்கியிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி உயிரற்ற உடலாக அங்கே கொண்டு வரப்பட்டார். இப்போது, வேதா நிலையம் களை இழந்து காணப்படுகிறது.



    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அந்த இல்லத்துக்கு அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் போயஸ் கார்டன் இல்லம் தற்போது இளவரசியின் மகன் விவேக் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது வீட்டு வேலையாட்களை தவிர, அங்கு யாரும் தங்கியிருக்கவில்லை.

    போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி சொத்து குவிப்பு வழக்கிலும் சிக்கியுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தற்போது அறிவித்து இருந்தாலும், பல்வேறு சட்ட சிக்கலுக்கு மத்தியில் அது எவ்வளவு நாட்களுக்குள் சாத்தியமாகும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனையை பெற்றே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க இருக்கின்றனர்.

    சட்ட போராட்டம் நடத்தி போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக்கும்போது, முதலில் வீட்டில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதன்பிறகு, ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், அவர் வாங்கிய பரிசுகள், கார்கள், அவர் படித்த புத்தகங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிக்கு வைக்கப்படும். அதன்பிறகு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×