search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி ஆட்சியில் தொடர முடியாது: புகழேந்தி
    X

    சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி ஆட்சியில் தொடர முடியாது: புகழேந்தி

    சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடர முடியாது என அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளரும் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளரும் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று பேசி வருகிறார்.

    இவரை யாரும் மிரட்டவில்லை. மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலா தயவால் முதல்-அமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி.

    இப்போது சசிகலா, தினகரன் இருவரையும் வேண்டாம் என்கிறார். அப்படியானால் இவர்கள் இருவரது தயவின்றி ஆட்சியில் தொடர முடியுமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.


    சட்டசபையில் தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். எனவே இந்த ஆட்சி கவிழுமா? கவிழாதா? என்பது எடப்பாடியின் முடிவை பொறுத்துதான் அமையும்.

    நடிகர் கமல்ஹாசன் முதல்-அமைச்சரை பதவி விலக சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இந்த அரசை ஊழல் அரசு என்கிறார்.

    ஒரு நடிகருக்கு பயந்து கொண்டு அமைச்சர்கள் இ.மெயில் முகவரியை அழிக்கலாமா? முதலில் அரசாங்கத்தின் இ.மெயில் முகவரியை மக்களுக்கு தெரிவியுங்கள். அதன் மூலம் மக்களின் புகார்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    அமைச்சர் உதயகுமார் ஆவணி மாதத்தில் நல்ல நாள் குறிப்பதாக கூறுகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து இங்கு வந்து நான் குழப்பம் விளைவிப்பதாக கூறுகிறார்.

    உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஒரு நல்ல செயலாளரை போடுங்கள். தலைமை கழகத்தில் சில பொறுப்புகள் காலியாக இருப்பதால் அதில் ஒரு பதவியை பெறுவதற்கு உதயகுமார் ஐடியா சொல்கிறார். பரவாயில்லை.

    உங்களுக்கு பதவி தந்து அழகு பார்த்த பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இப்போது கஷ்டப்படுகிறார். நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சவால் விடுகிறீர்கள். உங்களுக்கு காலம் பதில் சொல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×