search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப் 1 தேர்வு முறைகேடு: போலீஸ் விசாரணை அவசியம் - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
    X

    குரூப் 1 தேர்வு முறைகேடு: போலீஸ் விசாரணை அவசியம் - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

    குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், இதுகுறித்து போலீசாரின் புலன்விசாரணை அத்தியவாசியமாகிறது என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
    சென்னை:

    மதுரையை சேர்ந்த திருநங்கை சுவப்ணா. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப் 1 தேர்வில் பங்கேற்றேன். முதல் நிலைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றேன். இதையடுத்த நடந்த முதன்மை (2வது நிலை) தேர்வையும் நன்றாக எழுதினேன். ஆனால், இந்த தேர்வில் நான் தேர்ச்சிப் பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.



    இந்த நிலையில், கடந்த ஜூலை 18-ந்தேதி, குரூப் 1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இரண்டு விதமாக விடைத்தாள்கள் உள்ளன என்றும் தனியார் டி.வி. சேனல் செய்தி வெளியிட்டது. அதில், உண்மையான விடைத்தாள்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டது. எனவே, குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், ‘இந்த வழக்கில், தனியார் டி.வி. சேனலையும், சென்னை போலீஸ் கமி‌ஷனரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், குரூப் 1 தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வை கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்தி, இறுதி முடிவை, அதாவது தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரங்களை வெளியிட்டு விட்டது’ என்றார்.

    அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே, இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இறுதி முடிவு வெளியிட்டாலும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதீர்கள். அவ்வாறு எடுத்தால், தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவரையும் இந்த வழக்கில் எதிர்மனு தாரர்களாக சேர்க்க வேண்டும். இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்’ என்று கருத்து தெரிவித்தார்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் புருஷோத்தமன், ‘குரூப் 1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. தேர்வில் பங்கேற்றவர்கள் எழுதி விடைத்தாள் எப்படி வெளியானது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘டி.வி. சேனலிடம் உள்ள விடைத்தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை. இதுகுறித்து கடந்த 1-ந்தேதி போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்துள்ளோம்’ என்றார்.

    அதற்கு நீதிபதி, ‘இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தான் இருக்க வேண்டும். அது எப்படி இரண்டு விதமான விடைத்தாள்கள் உள்ளன? எனவே, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும், தனியார் டி.வி. சேனலும் தங்களிடம் உள்ள உண்மையான விடைத்தாள்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

    அப்போது மனுதாரர் வக்கீல், ‘ஏற்கனவே நேர்முகத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

    இதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். ‘தற்போது இந்த வழக்கின் நிலை, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு நன்றாக தெரியும். அதனால், அவர்களே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இந்த நிலையில, தடை உத்தரவு ஏதாவது பிறப்பித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மேலும், தனி நபர்கள் மட்டும் தான் தவறு செய்வார்கள். அரசு நிர்வாகம் தவறு செய்யாது என்று கூற முடியாது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், இதுகுறித்து போலீஸ் புலன்விசாரணை அத்தியவாசியமாகிறது’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    Next Story
    ×