search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    கமல்ஹாசன் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

    டுவிட்டர், பேஸ்-புக்கில் தெரிவிக்கும் கமல்ஹாசன் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் பல்வேறு நாடுகள் உருவாகாத காலகட்டத்தில் நம் நாடு உயர்ந்த நிலையில் இருந்தது. அதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்.

    டுவிட்டர், பேஸ்புக் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. எங்களை பற்றி கூறியிருந்தால் பதில் சொல்லலாம். கமல் நடிகர் என்ற முறையிலும் அவரது கருத்துக்கள் எங்களுக்கு உடன்படாத நிலையில் இருப்பதாலும், பிற இயக்கங்களை பற்றி அவர் சொல்வதற்கு நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை.

    நாகை, கடலூர் மாவட்டங்கள் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறார்கள். புதிய திட்டங்கள் தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என ஒரு சதிவலை பின்னப்படுகிறது. அதில் அவர்கள் தற்காலிக வெற்றியும் பெற்றுள்ளனர். நம் மாநிலத்தில் வேண்டாம் என சொல்லும் திட்டத்தை வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளனர். திட்டங்கள் வேண்டாம் என சொல்பவர்கள் மாநிலத்துக்கு என்ன திட்டம் வேண்டும் என கேட்கவில்லை.

    தமிழகத்தில் காங்கிரஸ், அழிந்து விட்டது. இப்போது காங்கிரஸ், கட்சியில் சில தலைவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்து கொண்டே வருகிறார்கள்.

    எந்த அரசியல் கட்சிக்கும் வளர்ப்பு தந்தையாக இருக்க பாரதிய ஜனதா தயாராக இல்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்கதான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். கூட்டணி என்பது வேறு வி‌ஷயம்.

    கர்நாடகா தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் கேவலமான நிலையை தமிழகத்தில் கொண்டுவந்தது 50 ஆண்டுகால திராவிட ஆட்சி. மழை பெய்து உபரி தண்ணீரை தமிழகத்துக்கு அனுப்பி அதை கர்நாடகா கணக்கு வைக்க வேண்டாம். இதை திருநாவுக்கரசு போன்றவர்கள் கர்நாடக காங்கிரஸ், அரசிடம் சொல்லட்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், அரசு இருக்கும் வரை நமக்கு தண்ணீர்வர வாய்ப்பு இல்லை.


    காங்கிரசும், தி.மு.க.வும் கர்நாடகத்துக்கு கண்டனம் தெரிவிக்காது. நம்மை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ், அரசு தோற்றுப்போன அரசு. எப்போது தேர்தல் வந்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

    காவிரி பிரச்சனையை மையப்படுத்தி தங்கள் மாநில அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கர்நாடக காங்கிரஸ், விரும்புகிறது. அதை ஆதாயமாகக் கொண்டு மீண்டும் ஆட்சிபிடிக்கலாம் என காங்கிரஸ், நினைக்கிறது.

    நெடுவாசல் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகண்டு 150 நாட்கள் ஆகிவிட்டன. மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

    தஞ்சை, நாகை மண்டலங்களை சேர்ந்த கிழக்கு கடற்கரை சாலையை சென்னை முதல் கன்னியாகுமரி வரை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். மழை பொய்த்துவிட்டால் விவசாயிகள் தொழில் பெருக தொழிற்சாலை, சுற்றுலாத்துறை மூலம் வருமானம் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நாட்டில் 54 லட்சம் கி.மீ. ரோடு நமக்கு இருக்கிறது. அதிகப்படியான சாலை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை 2 சதவீதம்தான். 1.15 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலையாக இருக்கிறது. அதை 2 லட்சம் கி.மீ.ஆக மாற்ற முயற்சிக்கிறோம். தேசிய நெடுஞ்சாலையில் 28 சதவீதம் விபத்து நடக்கிறது. விபத்தை பாதியாக குறைக்கவும் திட்டமிட்டு வேலை செய்கிறோம். விபத்து ஏற்படாமல் இருக்க ரோடு டிசைனை மாற்றி எல்லா வகையிலும் தகுதி நிறைந்த சாலையாக மாற்ற திட்டமிடுகிறோம். வாகனங்கள் விபத்து நடந்தாலும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்.

    78 சதவீதம் விபத்து டிரைவர்களால் நடக்கிறது. எனவே தமிழகம் உட்பட 16 இடங்களில் ஓட்டுனர்களுக்கு பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் என் மாநில மாணவர்களின் தகுதியை ஒருகாலமும் அழிக்க நான் தயாராக இல்லை. நீட் குறித்து எந்த தலைவர்கள் கருத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×