search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதல்: 4 பேர் பலி
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதல்: 4 பேர் பலி

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா கார், டிரைவர் கட்டுபாட்டை இழந்து ஆம்னி பஸ் மீது மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    உத்தரபிரதேச மாநிலம் ஆலன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோதிலால் (வயது 60). இவர் குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர் கடந்த 4-ந் தேதி உத்தரபிர தேசத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.

    மோதிலால் வந்த காரில் அவரது மகன் சபர்நாத் (38), மருமகள் சாதனாதேவி (35), பேரன் சுமீத் (14) மற்றும் டிரைவர்கள் ரவிசிங், கமலேஷ் ஆகியோர் வந்தனர்.

    முதலில் திருப்பதி சென்று தரிசித்த அவர்கள் பின்னர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆன்மிக சுற்றுலாவை முடித்த அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை வளைவில் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பஸ் மீது திடீரென்று மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த மோதிலால், அவரது மருமகள் சாதனாதேவி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    காரின் இடிபாட்டுக்குள் சிக்கி சபர்நாத், சுமீத் மற்றும் டிரைவர்கள் கமலேஷ், ரவிசிங் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி காரில் வந்த மோதிலாலின் மகன் சபர்நாத், டிரைவர் ரவிசிங் ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த சுமீத், மற்றொரு டிரைவர் கமலேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக வந்து தாய்-தந்தை மற்றும் தாத்தாவை இழந்து தவிக்கும் சிறுவன் சுமீத் நிலைமை பரிதாபமாக இருந்தது.
    Next Story
    ×