search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை-கடலூர் இடையே புதிய 100 அடி சாலை: நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுவை-கடலூர் இடையே புதிய 100 அடி சாலை: நாராயணசாமி அறிவிப்பு

    புதுவை - கடலூர் இடையே புதிய 100 அடி சாலை அமைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    உப்பளம் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

    புதுவையின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் என்றைக்கும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் காங்கிரஸ்- தி.மு.க. என்பதால் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் மக்கள் மலர செய்திருக்கிறார்கள்.

    அந்த வகையில் 2-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த புதுவை மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த நாளில் சுதந்திரத்துக்கான தன்னுயிரை ஈந்த தேச தலைவர்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்.

    புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களும் சமச் சீரான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

    புதுவையில் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 11.40 சதவீதமாகவும், தனி நபர் வருமானம் 10.60 சதவீதமாகவும் உயர்ந்திருப்பதை பெருமையோடு கூறி கொள்கிறேன். நிதி பற்றாக்குறையை சமாளித்து பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    விவசாயிகள் நலன் பெரும் வகையில் ரூ.31 கோடி பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் லாஸ்பேட்டையில் ரூ.6 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. சாரதாம்பாள் நகரில் ரூ.9 கோடியில் நீச்சல் குளம் கட்டப்பட உள்ளது.

    புதுவை வரலாற்றில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 236 இளநிலை மற்றும் 43 முதுநிலை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1850 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நகரின் குடிநீர் தேவை 122 மில்லியன் லிட்டராக உள்ளது. ஆனால், 112 மில்லியன் லிட்டர் குடிநீர் தான் வினியோகிக்கப்படுகிறது.

    பிரான்ஸ் நாட்டுடன் செய்து வந்த ஒப்பந்தத்தின் காரணமாக ரூ.1400 கோடிக்கு குடிநீர் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அது நிறைவேறும் போது 191 மில்லியன் லிட்டர் வழங்கப்படும்.

    முதலியார்பேட்டை 100 அடி சாலை மேம்பாலம் ஒரு பகுதி திறக்கப்பட்டுள்ளது. அரும்பார்த்தபுரம் பாலம், உப்பனாற்று பாலம் பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.

    புதுவை அரசு எடுத்த முயற்சி காரணமாக சென்னை, கடலூர் ரெயில்வே திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுவை- கடலூர் இடையே புதிய 100 அடி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம், புதுவை, காரைக்கால், நாகப்பட்டினம் பாதை 4 வழி சாலையாக அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    புதுவை கடற்கரையை புதுப்பிக்க ரூ.30 கோடியில் விரிவான திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும்.

    புதுவையை அமைதியான பாதுகாப்பான மாநிலமாக வைத்திருக்க அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 12 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன.

    அரசு எடுத்த தீவிர முயற்சியால் சுற்றுலா வரை படத்தில் புதுவை முக்கிய இடமாக மாறி வருகிறது. விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×