search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வர்த்தக மந்திரி ‘நீட்’ தேர்வு குறித்து அறிவிப்பு: நிர்மலா சீத்தாராமனுக்கு ப.சிதம்பரம்- கம்யூனிஸ்டு கண்டனம்
    X

    வர்த்தக மந்திரி ‘நீட்’ தேர்வு குறித்து அறிவிப்பு: நிர்மலா சீத்தாராமனுக்கு ப.சிதம்பரம்- கம்யூனிஸ்டு கண்டனம்

    வர்த்தக மந்திரி நிர்மலா சீத்தாராமன் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட்டு விமர்சித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் அறிவித்து இருந்தார்.

    இதை தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டத்தை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறது.

    இந்த நிலையில் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நிர்மலா சீத்தாராமன் மத்திய வர்த்தக மந்திரியாக இருக்கிறார். அவர் சுகாதாரதுறை தொடர்பாக கருத்து தெரிவித்து இருப்பதால் ப.சிதம்பரம் அதை விமர்சித்து இருக்கிறார்.

    இதுபற்றி ப.சிதம்பரம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “வர்த்தக மந்திரி நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். மின்துறை மந்திரி ஜி.எஸ்.டி. வரியை மாற்ற முடியாது என்று கூறுகிறார். இந்த துறைகளுக்கு யார்தான் மந்திரி” என்று கூறி உள்ளார்.

    இதே போல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் கனகராஜ் கூறும்போது, “நிர்மலா சீத்தாராமன் சுகாதார மந்திரியா? அல்லது உள்துறை மந்திரியா? பிரதமரா? அவர் எந்த முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்?

    அவரை பா.ஜனதா சார்பில் தமிழ்நாட்டில் முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்களோ? என்று சந்தேகிக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து மத்திய மந்திரியாக பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால், அவருக்கு இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

    நிர்மலா சீத்தாராமன் பற்றி ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் விமர்சித்தது குறித்து பாரதிய ஜனதா எம்.பி. எல்.கணேசனிடம் கேட்ட போது, “நிர்மலா சீத்தாராமன் தன்னிச்சையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    அது சம்பந்தமாக நிருபர்கள் கேட்ட போது, தகவலை பரிமாறி இருக்கிறார். சட்ட ரீதியாக என்ன செய்யலாம்? என்பது பற்றி தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் எடுக்க வேண்டிய முடிவை வேறு யாரோ எடுத்தார்கள். இதை ப.சிதம்பரம் வேண்டுமானால் மறந்து இருக்கலாம். ஆனால், மக்கள் மறக்கவில்லை” என்று கூறினார்.

    தமிழக பாரதிய ஜனதாவில் நிர்மலா சீத்தாராமனுக்கு ஏதேனும் முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறதா? என்று எல்.கணேசனிடம் கேட்ட போது, “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று என்னால் எதுவும் சொல்ல முடியாது.

    ஆனால், நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். இங்குதான் படித்தார். மத்திய மந்திரிகளில் திறமையான நபர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.

    தமிழிசை சவுந்தர்ராஜன் இதுபற்றி கூறும்போது, “நீட் தேர்வு சம்பந்தமாக தனது கருத்துக்களை அவர் கூறி இருக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை.

    பிரதமர் ராமேசுவரம் வந்தபோது இது சம்பந்தமாக நாங்கள் எல்லாம் பிரதமரிடம் பேசினோம். அதில், நிர்மலா சீத்தாராமனுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, அரசின் நிலை குறித்து அவர் கூறி இருக்கிறார்” என்றார்.
    Next Story
    ×