search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினவிழாவில் அப்துல்கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்
    X

    சுதந்திர தினவிழாவில் அப்துல்கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்

    நாட்டின் 71-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அப்துல்கலாம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    நாட்டின் 71-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.30 மணிக்கு தேசிய கொடியையேற்றி சுதந்திர தின உரையாற்றினார்.

    சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதன்விவரம் வருமாறு:-

    1. டாக்டர் அப்துல்கலாம் விருது போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது.

    இவர் 345 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 20 நூல்களையும் வெளியிட்டுள்ளார். 8 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

    மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் ‘வைரோஹெப்’ என்ற மருந்தினை இந்திய மருத்துவ தாவரத்தில் இருந்து கண்டுபிடித்து அதற்காக காப்புரிமை பெற்று சாதனை படைத்தவர். இவர் ஏற்கனவே இத்தாலிய அரசின் ‘செவாலியே விருது’ பெற்றவர். இவர் விருதுடன் ரூ.5 லட்சம் காசோலையும், 8 கிராம் தங்க பதக்கமும் பெற்றார்.

    2. துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரித்தீக்கு வழங்கப்பட்டது.

    இவர் 19 வயதுக்கு உட்பட்ட தமிழக மட்டை பந்து அணியின் தலைவியாகவும், 1997-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் மாநில அணியை 17 வயதில் தலைமையேற்று நடத்தி வெற்றி பெற்றவர்.

    விபத்தில் உடல் உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தே செயல்படும் இவர் விபத்துகளில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் பயிற்சி, சுய தொழில் ஆகியவற்றை வழங்குவதற்கு பாடுபட்டு வருகிறார்.

    இவருக்கு ரூ.5 லட்சம் காசோலையும் தங்க மூலாம்பூசிய பதக்கமும் வழங்கப்பட்டது.

    3. முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிக வரித்துறை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.

    4. சென்னை மருத்துவ கல்லூரி கல்லீரல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கே.நாராயணசாமிக்கு விருது வழங்கப்பட்டது.

    இவர் முதன் முதலில் கல்லீரல் மருத்துவமனையை அமைத்தார். இந்த மருத்துவமனை அரசு பொது மருத்துவமனையில் கல்லீரலுக்கென்று தனி துறையாக முன்னேற்றம் பெற்றது. இவரது சாதனையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    5. மரங்களை வளர்ப்பதில் தண்ணீர் பாய்ச்சும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்ததற்காக வருவாய் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சத்திய கோபாலுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    6. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மருத்துவராக காஞ்சீபுரம் கண் அறுவை சிகிச்சை டாக்டர் சங்கரன், சிறந்த சமூகப் பணியாளராக மதுரை மாவட்டம் க்யூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனர் இளைய பாரிக்கு விருது வழங்கப்பட்டன.

    சிறந்த தொண்டு நிறுவனமாக செயல்பட்ட “மெசிஞ்சியா” அறக்கட்டளைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கிய திருச்சி ‘ஆர்பிட்’ நிறுவனத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

    சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.

    மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய நீலகிரி ஆதிவாசி நலச்சங்கத்திற்கு சமூக பணியாளருக்கான விருதும், நாகப்பட்டினம் கூத்தூர் வினோபா ஆசிரம செயலாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும் விருது வழங்கப்பட்டது.

    சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சிக்கு விருதும் ரூ.25 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

    சிறந்த நகராட்சியாக சத்தியமங்கலம் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.15 லட்சமும், பூந்தமல்லி நகராட்சிக்கு 2-வது பரிசு ரூ.10லட்சம், திருமங்கலம் நகராட்சிக்கு 3-வது பரிசு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இவற்றை அந்தந்த கமி‌ஷனர்கள் பெற்றுக் கொண்டனர்.

    சிறந்த பேரூராட்சிகளாக பொன்னம்பட்டி பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு ரூ.10 லட்சமும், 2-வது பரிசு இருகூர் பேரூராட்சிக்கு ரூ.5 லட்சமும், 3-வது பரிசு நம்பியூர் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது. இவற்றை அந்தந்த செயல் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

    முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் கோவை ஏ.ஜி.பத்மநாபன், விருதுநகர் உமயலிங்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி தங்கத்திற்கு வழங்கப்பட்டது. இவர் சீமை கருவேல மரங்களை அழிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

    விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை, சட்டசபை சபாநாயகர் தனபால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மேலூரில் நடந்த டி.டி. வி.தினகரனின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நவநீதகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உமாமகேஸ்வரி, சந்திரபிரபா ஆகியோரும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×