search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: திருச்சி விடுதிகளில் விடிய, விடிய சோதனை
    X

    நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: திருச்சி விடுதிகளில் விடிய, விடிய சோதனை

    சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க திருச்சியில் ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    நாட்டின் 71-வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்திலும் நாளை கொண்டாட உற்சாகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நாளை காலை 8 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் ராசா மணி தேசியக் கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதே போன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், குடியிருப்புகள், அனைத்து இடங்களிலும் சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க திருச்சி மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் அருண் உத்தரவின் பேரிலும், புறநகர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் உத்தரவின் பேரிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சுதந்திர தினவிழாவையொட்டி சமூக விரோதிகள் லாட்ஜ்கள், ஓட்டல்கள், மண்டபங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் குடியிருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடலாம் என தகவல் கிடைத்துள்ளது.

    எனவே திருச்சி மாநகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சில குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் உதவி ஆணையர் சுந்தர்ராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    விடிய, விடிய நடந்த சோதனையில் லாட்ஜூகளில் தங்கியிருப்பவர்கள் விபரம் திரட்டப்பட்டது. அவர்களின் முகவரிகள், அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்டது. லாட்ஜ் உரிமையாளர்களிடம் விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் பட்டியலை தினமும் போலீஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

    இதேபோன்று திருச்சி ஜங்‌ஷன், காவிரி, கொள்ளிடம் போன்ற ஆற்று ரெயில்வே பாலங்கள், மேம்பாலங்கள், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில் போன்ற முக்கிய கோவில்கள், மசூதிகள், தேவலாயங்கள் முன்பும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையம், கருமண்டபம், எடமலைப் பட்டிபுதூர், அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா, கொள்ளிடம், சோதனை சாவடிகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

    திருச்சியில் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் ரெயில்களில் பார்சல் அனுப்ப இன்று முதல் 3 நாட்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. திருச்சி பஸ் நிலையங்களில் விடிய விடிய கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×