search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்: ஓரிரு நாளில் இணைகிறது அ.தி.மு.க. அணிகள்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. தற்போது எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன் அணி என 3 அணிகளாக உள்ளது.

    சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து தினகரன் அணி எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

    எடப்பாடி அணியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் தினகரன் அணி ஈடுபட்டு வருகிறது.

    கட்சியில் தங்களை ஈடுபட அனுமதிக்காவிட்டால் எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்கவும் தினகரன் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.

    டி.டி.வி. தினகரனின் அணியினர் கொடுத்து வரும் இடைஞ்சல்களை எடப்பாடி பழனிசாமி சாதுரியமாக சமாளித்து வருகிறார். எந்த கொம்பனாலும் ஆட்சியையோ, கட்சியையோ எதுவும் செய்ய முடியாது என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அணிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். அணியை இணைக்கும் முயற்சியில் எடப்பாடி அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    இதன் ஒரு பகுதியாக சசிகலா, டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது எடப்பாடி அணியுடன் சேர ஓ.பி.எஸ். அணி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று.

    இதனால் ஓ.பி.எஸ். அணி- எடப்பாடி அணியுடன் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுபற்றி ஓ.பி.எஸ். கருத்து தெரிவிக்கையில் எங்கள் நிபந்தனைகளில் பாதி கிணறைத்தான் தாண்டி உள்ளனர் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் டெல்லி சென்றிருந்தனர். இருவரும் பிரதமரை சந்திக்க முயற்சி எடுத்தனர்.

    இதில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு வந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தால் பிரதமரை சந்திக்க முடியவில்லை.

    இரு அணியினரும் சண்டை போடுவதை நிறுத்தி விட்டு இணைந்து வந்து என்னை சந்தியுங்கள் என்று பிரதமர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க முடியாமல் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    சீரடியில் ஓ.பன்னீர் செல்வம் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு நேற்று அழைப்பு வந்தது. இன்று காலை 11 மணிக்கு வந்து பிரதமரை சந்தியுங்கள் என்று கூறினார்கள்.

    இதனால் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் பயணத்தை ரத்து செய்து விட்டு புனே வழியாக நேற்று டெல்லி சென்றார்.

    இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அவருடன் மைத்ரேயன் எம்.பி. மற்றும் நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து விவாதித்தனர். பதவியை எதிர்பார்க்காமல் அனுசரித்து முதலில் இணையுங்கள். மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்ததாக தெரிகிறது.

    எனவே பிரதமருடனான ஓ.பி.எஸ். சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எடப்பாடி அணி ஓ.பி.எஸ். அணி ஓரிரு நாளில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×