search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: கவர்னர் வாழ்த்து
    X

    உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: கவர்னர் வாழ்த்து

    அகில இந்திய அளவில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பெற்றதற்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபத்தில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கவர்னர் வித்யாசாகர் ராவ், உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்களையும், மருத்துவர்களையும் கவுரவித்தார்.

    தொடர்ந்து கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசும்போது, ‘இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உடல் உறுப்பு அறுவை சிகிச்சையை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருதினை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதற்காக தமிழகத்தை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன்’ என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அதற்கு அவரே தலைவராக இருந்து அர்ப்பணிப்புடன் வழிநடத்தினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இச்சிகிச்சைக்காக ரூ.35 லட்சம் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்குகிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமான தொகையாகும். ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 27-ந் தேதி வரை உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திட தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு முன்வர வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக சுகாதாரத்துறை நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் மற்றும் மருத்துவர்கள் விமல் பண்டாரி, முகமது ரீலா, பாலாஜி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×