search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை மறுநாள் சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
    X

    நாளை மறுநாள் சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

    நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வி‌ஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கு மாறும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி கடந்த ஒரு வாரமாக கோட்டையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விழா நடைபெறும் இடத்திலும் சோதனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல் சென்னையில் உள்ள முக்கியமான இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி கடந்த ஒரு வாரமாக பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


    சுதந்திர தின விழா முடிந்த பிறகும் மேலும் 2 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் போலீசார் ஏறி தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கோவில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் வணிக வளாகங்களில் தனியார் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அவர்கள் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×