search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நற்பணி மன்றத்தை மதுசூதனன் திறந்து வைத்தபோது எடுத்த படம்
    X
    நற்பணி மன்றத்தை மதுசூதனன் திறந்து வைத்தபோது எடுத்த படம்

    அ.தி.மு.க.வில் தினகரனால் குண்டூசியை கூட அசைக்க முடியாது: மதுசூதனன்

    அ.தி. மு.க.வில் இருந்து ஒரு குண்டூசியை கூட தினகரனால் அசைக்க முடியாது எனவும் சசிகலா குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும், மதுசூதனன் கூறியுள்ளார்.
    ராயபுரம்:

    அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை ஏ.ஜி.கோவில் தெருவில் 13 இடங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயரில் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    மன்றங்களை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் திறந்து வைத்தார். கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் 2 அணிகள் இணைய அம்மா (ஜெயலலிதா) மரணம் குறித்து விசாரணை மற்றும் கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என்ற 2 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். 3-வது கோரிக்கையாக ஓ.பி.எஸ்.சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    அம்மாவால் பல்வேறு கால கட்டங்களில் முதல்- அமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். அவர் அம்மாவின் நம்பிக்கைக்குரியவர். ஜல்லிக்கட்டு மற்றும் வர்தா புயல் பிரச்சினையின்போது மக்களின் மனதில் நின்றவர்.

    குடும்ப அரசியலை ஒழிக்கவே எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால் தற்போது சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க.வை கைப்பற்ற துடிக்கிறார்கள். சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும்.

    மக்கள் விரும்பினால் டி.டி.வி.தினகரன் புது கட்சி தொடங்கலாம். அ.தி. மு.க.வில் இருந்து ஒரு குண்டூசியை கூட அவரால் அசைக்க முடியாது. சசிகலா குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு தான் சசிகலா குடும்பம் அ.தி.மு.க.வுக்கு வந்தது.



    சசிகலாவை எதிர்க்க எனக்கு இதுவரை எந்த பின்பலம் கிடையாது. தற்போது எனக்கு ஓ.பி.எஸ். பின்பலமாக இருக்கிறார். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    சசிகலா சிறையில் இருந்து தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அது நம்பும் படியாக இல்லை. சசிகலா கபட நாடகம் ஆடுகிறார்.

    ஒரு குடம் பாலில் ஒருதுளி வி‌ஷம் என அம்மாவால் சொல்லப்பட்டவர் வெற்றி வேல். அவர் ஒரு அரசியல் வாதி அல்ல. கட்டப்பஞ்சாயத்துக்காரர். இவருக்கு அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாது. காங்கிரசில் இருந்து வந்தவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வட சென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×