search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் நாளை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் நாளை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக நாளை டெல்லி செல்ல இருப்பதாக மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார்.
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக பிளவு பட்டுள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு டி.டி.வி. தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியும் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் கமி‌ஷன் அ.தி.மு.க. சின்னம், கொடியை முடக்கி வைத்து இருப்பதால் கட்சி யாருக்கு என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. அணிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    சசிகலா, தினகரனை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.

    இந்த நிபந்தனைகளில் சசிகலா, தினகரனை ஒதுக்கிவைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. அணிகளை இணைப்பதில் பா.ஜனதா தலையீடு இருப்பதாகவும், பிரதமர் மோடியே இரு அணி தலைவர்களையும் சந்தித்து சமரச முயற்சிகளை மேற்கொள்ள யோசனை தெரிவித்தார் என்றும் தகவல் வெளியானது.

    அதற்கு ஏற்றபடி டெல்லி செல்லும் போதெல்லாம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்தித்து வந்தனர். என்றாலும் இணைப்பு முயற்சி நடக்கவில்லை. வருகிற 15-ந் தேதிக்குள் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி அணியினர் இணைப்பு முயற்சிக்கு நிபந்தனையின்றி தயாராக இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதற்கு தயாராக இல்லை.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவியும், அவரது அணியினருக்கு 2 அமைச்சர்கள் பதவியும் தர எடப்பாடி பழனிசாமி அணி யினர் முன் வந்தனர். பொது செயலாளர் பதவியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தர தயாராக இருந்தனர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் குழப்பம் ஏற்படுத்தி வருவதால் இணைப்பு முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தயங்கினர்.

    தினகரன் நியமனம் செல்லாது. அவர் நியமித்த நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்று அறிவித்த பின்னரும் கூட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைப்பு முயற்சிக்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    இதனால் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது பிரதமர் மோடி அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் இதனால் துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க பிரதமர் மோடி மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

    நேற்று முன்தினம் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

    அதே சமயம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசினார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தால் யாரையும் சந்திக்க முடியவில்லை. பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அந்த சந்திப்பும் நடக்கவில்லை.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென்று மும்பை சென்றார். அங்கிருந்து ஷீரடி சென்று சாய்பாபா கோவிலிலும், சனிபகவான் கோவிலிலும் சாமிகும்பிட்டார். பிரதமர் சந்திக்க மறுத்ததால் அவர் மும்பை சென்றதாக கூறப்பட்டது.

    இதற்கிடையே பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் நாளை சந்தித்துப் பேசுவார் என்றும் இதற்காக அவர் இன்று மாலை மும்பையில் இருந்து டெல்லி செல்கிறார் என்றும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

    பிரதமர் மோடி- ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின்போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி பேசுவார்கள் என்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

    மோடியை சந்தித்த பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×