search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலை: சீமான், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி கோரிக்கை
    X

    கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலை: சீமான், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

    கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலையை அமைக்க வேண்டும் என்று சீமான், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை, சமீபத்தில் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குனர்கள சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது சிவாஜி கணேசன் சிலையை மீண்டும் மெரினா கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது பற்றி சீமான் கூறியதாவது:-

    சிவாஜி சிலை அகற்றப்பட்டது அவமரியாதை, கண்ணகி சிலையை எடுக்க என்ன காரணமோ சிவாஜி சிலை அகற்றுவதற்கும் அது தான் காரணம். சிவாஜி சிலை அருகே எத்தனை விபத்துக்கள் நடந்தது என்ற புகார் விவரம் யாரிடமும் இல்லை. மீண்டும் கடற்கரையில் அவர் சிலையை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, பேசும் போது, “சிவாஜி அபூர்வ கலைஞர். அவருக்கு மீண்டும் மெரினா கடற்கரையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை” என்று கூறினார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதனும் இதே கருத்தை ஆதரித்து பேசினார்.

    கடற்கரையில் சிலை அமைப்பது குறித்து முதல்- அமைச்சருக்கு, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு.

    அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார். நடிப்புக்கலைக்கு உலகின் எந்த பகுதியில் களம் அமைத்தாலும் அந்தக் களத்தில் தன் நடிப்புத்திறனால் பெரும் வெற்றி கண்டவர் நமது நடிகர் திலகம்.

    கோடானுகோடி தமிழர்களுக்கும் தன் நடிப்புத் திறமையால் பெருமையைத் தேடித்தந்தவரை அடையாளம் கண்டு அரங்கேற்றியவர் பேரறிஞர் அண்ணா.

    உரை நடைத் தமிழின் நவரச உணர்வுகளையும், பேசும் செந்தமிழின் இனிமையையும், மக்களின் செவிகளில் தேனாக ஊற்றியவர் சிவாஜி கணேசன். தாய்த் தமிழ் அன்னையின் மூத்த மகனான அவர் மறையவில்லை. சாதனை புரிந்தவராக ஊடகங்களில் நம் தாய்த்தமிழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த் தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆவலும் கூட.

    எனவே, நடிகர் திலகத்தின் நல்லுருவச் சிலையை மெரினா கடற்கரைச் சாலையிலேயே நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் நிறுவிட வேண்டும் என்று அன்புடன் எங்களது கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதையே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகக் கருதி நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×