search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: சாவில் சந்தேகம் என குடும்பத்தினர் கதறல்
    X

    எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: சாவில் சந்தேகம் என குடும்பத்தினர் கதறல்

    ஆரணியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் இலுப்பகுணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருடைய மனைவி ஜோதி. இவர்களது மகன் கார்த்திகேயன் (வயது 32). இவரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்.

    கார்த்திகேயனுக்கு, திருமணமாகி ஜெயந்தி என்கிற மனைவியும், 3 வயதில் ஷான் கீர்த்தி என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர்.தந்தை வழியில் பி.எஸ்.எப். எனப்படும் நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கிற கனவில் பணியில் சேர்ந்தார்.

    திரிபுரா மாநிலம் நல்கொட்டா என்ற பகுதியில் 9 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.கார்த்திகேயன் கடந்த மாதம் 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார். பெற்றோர், மனைவி, குழந்தையுடன் சந்தோ‌ஷமாக இருந்துவிட்டு சமீபத்தில் தான் திரிபுராவில் பணிக்கு திரும்பினார்.

    திரிபுரா சென்ற அவருக்கு திடீரென உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆஸ்பத்திரியில் 2 நாட்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். உடல் நலம் தேறிய நிலையில், கடந்த 10-ந் தேதி முகாமிற்கு சென்றுள்ளார்.

    முகாமில் அவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து, எல்லை பாதுகாப்பு படை அலுவலக அதிகாரிகள், போன் மூலம் ஆரணியில் உள்ள கார்த்திகேயனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து கார்த்திகேயனின் பெற்றோர் கூறியதாவது:-

    கார்த்திகேயன் ஊருக்கு வந்து சென்றபோது, எந்த மன அழுத்தத்திலும் இல்லை. எல்லோரிடமும் சகஜமாக சந்தோ‌ஷமாக பேசினார். சேத்துப்பட்டு அருகே நரசிங்கபுரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கும் சென்று வந்தார். நண்பர்களையும் சந்தித்து பேசினார்.

    திரிபுராவிற்கு சென்ற பிறகு, அவருக்கு உடல்நலம் பாதித்தது. போன் மூலம் எங்களுக்கு மகன் தகவல் கொடுத்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகு, 10-ந் தேதி மதியம் 2 மணிக்கு போன் செய்து பேசினார். அன்றிரவு, 9 மணிக்கு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், எங்களுக்கு முதல் முறை போன் செய்து பேசினர்.

    அப்போது, உங்கள் மகன் எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்று கூறினர். பிறகு, 2-வது முறை போன் செய்து ‘‘இல்லை இல்லை உங்கள் மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’’ என்று தெரிவித்தனர்.

    3-வது முறை போனில், பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அழைப்பை துண்டித்தனர். அதன்பிறகு, அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.

    கார்த்திகேயன் இறப்பில் அதிகாரிகளின் முன்னுக்கு பின் முரணான பதில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் சாவில் மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர், தற்கொலை செய்து கொள்வதற்கு கோழை இல்லை.

    எல்லை பாதுகாப்பு படை பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட கார்த்திகேயன், பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்று அதிகாரிகளின் விளக்கத்தை எங்களால் நம்ப முடிய வில்லை.

    கார்த்திகேயன் இறப்பில் உரிய விசாரணை நடத்தி உண்மையான காரணத்தை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் செய்தாலும், அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க மறுக்கிறார்கள்.

    கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலையடுத்து, மாநில அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    உடலை மீட்டு வரவும் உதவி செய்யவில்லை என்று கூறி கதறி அழுதனர்.

    Next Story
    ×