search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் யாருக்கு?: எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி
    X

    இரட்டை இலை சின்னம் யாருக்கு?: எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி

    அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியப்பட்டினத்தை சேர்ந்தவர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இதை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவும் பதவி ஏற்றார். அ.தி.மு.க.வில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது.

    இதன்பின்னர் சசிகலாவை முதல்-அமைச்சர் பதவிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து விட்டனர் என்று போர் கொடி தூக்கினார்.

    இதனால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க. அம்மா அணி என்றும, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் தற்போது செயல்படுகிறது. இதற்கிடையில், கட்சியும், கட்சியின் தேர்தல் சின்னமும் யாருக்கு? என்று இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தில் தொண்டர்களின் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து வருகிறது.

    இது தேவையற்ற நடவடிக்கை ஆகும். பொதுவாக, தேர்தல் சின்னம் (ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு) சட்டம் 1968-ன் படி, ஒரு அரசியல் கட்சி இரண்டு அணியாக பிரிந்தால், அந்த கட்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் அதிக வாக்கு பதிவான அணிக்கு, கட்சியின் தேர்தல் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    1968-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, இந்த நடைமுறையைத்தான் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டது. முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், ஆகியோருக்கு இடையே பிரச்சனை வந்தபோது, இதே நடைமுறையைத்தான் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால், அ.தி.மு.க. வி‌ஷயத்தில் மட்டும், உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துக் கொள்ள பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மத்தியில், தேர்தல் ஆணையம் இவ்வாறு செயல்படுவது பாரபட்சமானது.

    எனவே, அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் வெற்றிப் பெற்ற அணிக்கு இச்சின்னத்தை வழங்கவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், ஆதி கேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் எப்படி தொடர முடியும்? ஐகோர்ட்டு மதுரை கிளையில் தானே தாக்கல் செய்யவேண்டும். எனவே, இந்த வழக்கு ஏற்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

    இதற்கு மனுதாரர் வக்கீல், ‘இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்குகள் எல்லாம் சென்னை ஐகோர்ட்டில் தான் தாக்கல் செய்யவேண்டும் என்று ஏற்கனவே ஒரு சுற்றறிக்கையை ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ளது’ என்று கூறினார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக வக்கீல் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப்பெற அனுமதித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×