search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலத்தில் பேக்கரியில் ரூ.35 ஆயிரம் கொள்ளை - தீ வைப்பு
    X

    மயிலத்தில் பேக்கரியில் ரூ.35 ஆயிரம் கொள்ளை - தீ வைப்பு

    பேக்கரி கடையில் ரூ.35 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபர்கள், கடைக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலம்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் தங்களது பணிகள் முடிந்து பேக்கரியை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பேக்கரியில் இருந்து திடீரென்று புகை மூட்டம் கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் பேக்கரியில் இருந்த ஒரு சில பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.

    இது பற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பால்சுந்தர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பேக்கரியின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பேக்கரியில் வைத்திருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.35 ஆயிரம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் பேக்கரியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தீ வைத்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டது.

    எனவே, கொள்ளையர்கள்தான் பேக்கரியை தீ வைத்து எரித்திருப்பது தெரிய வந்தது. பேக்கரியில் கொள்ளையடித்து விட்டு தீ வைத்து தப்பி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் மயிலம் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×