search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறைமுகத்தை செயல்படுத்த அரசு எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்
    X

    துறைமுகத்தை செயல்படுத்த அரசு எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

    துறைமுக திட்டத்தை செயல்பட விடாமல் கவர்னர் தடுக்க பார்க்கிறார் என்ற நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கிரண்பேடி இணைய தளம் மூலமாக பதில் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் சிறிய அளவிலான துறைமுகம் ஒன்று உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை துறைமுகம் செயல்படவில்லை.

    இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற காங்கிரஸ் அரசு துறைமுகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்காக மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக புதுவை துறைமுகம் செயல்படுவது என்றும், சென்னைக்கு வரும் சரக்குகளை பர்ஜர் எனும் சிறிய கப்பல்கள் மூலம் புதுவைக்கு கொண்டு வந்து அவற்றை இறக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    துறைமுகத்தின் முகப்பு பகுதியில் ஏராளமாக மணல் தேங்கி இருந்தது. அவற்றை அகற்றுவதற்கு மண் அள்ளும் கப்பல்கள் வரவழைக்கப்பட்டன.

    இந்த பிரச்சினையில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இப்போது மண் அள்ளும் பணியை முடித்து விட்டு கப்பல்கள் திரும்பி சென்று விட்டன.

    ஆனால், துறைமுக பணிகள் குறித்து அவ்வப் போது கவர்னர் கிரண்பேடி விமர்சித்து வந்தார். இது சம்பந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி துறைமுக திட்டத்தை செயல்பட விடாமல் கவர்னர் கிரண் பேடி தடுக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி இணைய தளம் மூலமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறி யிருப்பதாவது:-

    இந்த துறைமுகத்தை செயல்படுத்துவதற்கு அரசு சரியான முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. முன்கூட்டியே செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் எப்படி துறைமுகத்தை செயல்படுத்த முடியும்?

    துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளை வெளியே கொண்டு செல்வதற்கு புறவழிச்சாலை செயல்படுத்தப்படவில்லை. சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு போதிய பாதை வசதி உள்ளதா?

    அந்த லாரிகள் செல்லும் பாதையில் உள்ள பாலங்கள் இதை தாங்கும் அளவுக்கு இருக்கிறதா? துறைமுகத்துக்கு வரும் பணியாளர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? கழிவறை வசதி என்ன நிலையில் உள்ளது?

    புதுவை துறைமுக துறையில் இயக்குனர் உள்பட 64 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. துறைமுகத்தை இயக்க தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை. அவர்கள் இல்லாமல் துறைமுக பணிகளை எப்படி செயல்படுத்த முடியும்?

    தற்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை இடமாற்றம் செய்வதற்கு என்ன வழி செய்யப்பட்டுள்ளது? இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் அங்கு எரிபொருள் கிடங்கு அமைக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? அதற்கான இடம் எங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது? இப்படி எந்த வசதியும் செய்யாமல் துறைமுகத்தை செயல்பட வைக்க முடியுமா?

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    Next Story
    ×