search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து சேதம்
    X

    சீர்காழியில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து சேதம்

    சீர்காழியில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்ததில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமானது.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே நேரு காலனி உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு 2 மணியளவில் இப்பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வரும் பச்சையம்மாள் (வயது55) என்பவரது வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. அப்போது வீட்டிற்குள் தூங்கிய அவர் மீது எரிந்து கொண்டிருந்த கீற்று விழுந்ததால் அதிர்ச்சியில் எழுந்து பார்த்தபோது வீடு தீப்பிடித்து எரிவது தெரிந்தது.

    இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியில் ஓடிவந்து சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அப்போது பச்சையம்மாள் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் மேலும் அதிகளவில் தீப்பிடித்ததில் அருகில் இருந்த பழனிவேல், சேட், விஜய், செல்வராஜ், பாலா, ராதா, அகோரமூர்த்தி ஆகிய 7 பேர் வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.

    இதில் 8 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டது. சேதமதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகில் சுமார் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பின. இதில் பச்சையம்மாளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்து இன்று காலை பாரதி எம்.எல்.ஏ., தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் தெட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் தீ விபத்தில் பாதித்த 8 பேர் குடும்பத்துக்கும் அரசு நிவாரண உதவியாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணை ஆகியவற்றை வழங்கினர். மேலும் பாரதி எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து 8 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

    தீவிபத்தில் எரிந்து சேதமான ரே‌ஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ் ஆகியவற்றிக்கு பதிலாக புதிதாக ஆவணங்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் பாலமுருகனை, பாரதி எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×