search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் வேகநதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு: தி.மு.க.-காங். கட்சியினர் பேரணி
    X

    காஞ்சீபுரத்தில் வேகநதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு: தி.மு.க.-காங். கட்சியினர் பேரணி

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வேகநதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நேதாஜி நகர், காமாட்சியம்மன் காலனி, மந்தவெளி, தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை வழியாக வாலாஜாபாத் வரை வேகநதி ஆறு செல்கிறது. ஆற்றின் கரையோரத்தை ஆக்கரமித்து ஏராளமானோர் வீடுகள் கட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றினை ஆழப்படுத்தும் அதிரடி நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வேகநதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 1418 குடியிருப்புகளை அகற்றும்படி பொதுப் பணித்துறையினர் ஆக்கிரப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    அவர்களுக்கு கீழ்கதிபூர் பகுதியில் உரிய இடம் ஒதுக்கியதுடன் 21 நாட்களுக்குள் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை காலிசெய்யவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஆக்கிரப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிப்பவர்கள் காஞ்சீபுரத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் தேரடியில் தொடங்கிய பேரணியில் தி.மு.க. எம்.எல்.ஏ.., எழிலரசன், காங்கிரஸ் முன்னாள் எம்பி விஸ்வநாதன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழகமெங்கும் உள்ள ஏரி,குளம் போன்ற நீர்நிலைகளை காக்க திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவுபடி தி.மு.க.வினர் தூர் வாரிவரும் நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக காஞ்சீபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ., எழிலரசன் பேரணியாக சென்றது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×