search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வு விவகாரம்: அரசியல் தலையீட்டால் மாணவர்கள் பாதிப்பு - தமிழிசை பேட்டி
    X

    ‘நீட்’ தேர்வு விவகாரம்: அரசியல் தலையீட்டால் மாணவர்கள் பாதிப்பு - தமிழிசை பேட்டி

    ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தீவிரமான ஆய்வுக்குப்பிறகு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் தலையிட்டு மாணவர்களை குழப்பி, நிலையான முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இதனால் அரசியலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாணவர்களின் கல்வித்தரம்தான் பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வை தமிழ் வழியில் படித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருக்கிறார்கள். அவர்களில் 4 ஆயிரம் பேர் பாஸ் ஆகி இருக்கிறார்கள். நமது மாணவர்கள் திறமையானவர்கள். அவர்களை ஊக்குவிப்பதை விட்டு தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார்.

    இவர்கள் ஆண்ட காலத்தில் மாணவர்களை அகில இந்திய போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் தயார் செய்து இருக்க வேண்டும். அவர்கள் செய்த தவறை மறைக்க மீண்டும், மீண்டும் மாணவர்களை குழப்பி திசை திருப்ப கூடாது.



    கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போதும் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்கிறார் மு.க. ஸ்டாலின்.

    தங்க வைக்கப்பட்டிருப்பது யார் என்பது வருமான வரித்துறைக்கு முக்கியமல்ல. தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம்தான் அவர்களுக்கு முக்கியம். பெங்களூரில் சோதனை நடத்தப்பட்ட விடுதி முறையான வருமானவரி செலுத்தவில்லை, பண பரிவர்த்தனைக்கு கணக்கு காட்டவில்லை என்ற புகாரில் சோதனை நடந்ததாக கூறி இருக்கிறார்கள்.

    முக்கியமாக, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். எனவே இவர்கள் மனநிலையை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார்.

    இதில் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், டால்பின் ஸ்ரீதரன், காளிதாஸ், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சி.தங்கமணி, இளைஞர் அணி துணைத் தலைவர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×