search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் கோவில் திருவிழா
    X

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் கோவில் திருவிழா

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் கோவில் திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு போதமலை மலையாள தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. ஆலமரத்து அடியில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி 18 பண்டிகையையொட்டி நடந்து வருகிறது.

    இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாளான நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை அலங்கத்தாய் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இண்டங்காட்டு கருப்பு சாமிக்கு முப்பூஜையும் நடந்தது.

    பின்னர் இரவு விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொங்களாயி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் முதலில் பெண் ஆடு பலியிடப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கொண்டுவந்த 140 ஆடுகள் பலியிடப்பட்டன. இதனிடையே இன்று காலை நடைபெற இருந்த சமபந்தி விருந்திற்கு ஏதுவாக பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி மற்றும் பொங்கலை பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து சமைக்கும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய-விடிய நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று சமபந்தி விருந்து சாப்பிட்டனர்.

    திருவிழாவின்போது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியையோ அல்லது விருந்திற்கு வைக்கப்பட்ட உணவையோ வீடுகளுக்கு பக்தர்கள் கொண்டு செல்வதில்லை.

    ஆண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த திருவிழா மூலம் நோய் நொடி நீங்குவதாகவும், விவசாயம் செழித்து விளங்குவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தை பாக்கியம் கிடைத்து, குடும்ப பிரச்சினை இன்றி வாழ முடிகிறது என்றும் அவர்கள் கூறினர். ஆன்மீகம் என்றால் பெண்களின் ஈடுபாடு அதிகம் இருந்து வருகின்ற இந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த கோவில் திருவிழா தமிழக அளவில் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருவிழாவில் வடுகம், புதுப்பட்டி, நாமகிரிபேட்டை, ராசிபுரம், பட்டணம், சீராப்பள்ளி, மெட்டாலா உள்பட பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் எஸ்.சுப்பிரமணியம், ஆர். துரைசாமி, ஆர்.சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×