search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
    X

    ‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

    ‘நீட்’ தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்டு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாணவர்கள் மத்தியில் வரவேற்பும் இருக்கிறது எதிர்ப்பும் இருக்கிறது.

    நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட தனியார் மருத்துவ கல்லூரிகள் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

    பழைய முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எளிதில் ‘சீட்’ வாங்கி விட முடியும். ஆனால் நீட் முறைப்படி மத்திய மருத்துவ கவுன்சில் தான் மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கு அட்மி‌ஷன் கார்டு வழங்கும். கட்டணத்தை பெற்றுக் கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான் கல்லூரிகளின் வேலை.

    இப்படி சாதகமும், பாதகமும் கலந்து விவாதத்துக்குள்ளாகி இருக்கும் நீட் தேர்வு பிரச்சினையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. பல முனைகளிலும் கருத்துக்களையும் கேட்டு வருகிறது.

    அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவுக்கு வந்திருந்த பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து இது பற்றி விவாதிக்கும்படி பிரதமர் மோடி கூறினார். தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையும் மருத்துவர் என்பதால் இந்த ஆலோசனையில் பங்கேற்க கூறினார்.



    இதையடுத்து டாக்டர் தமிழிசை, இல.கணேசன் எம்.பி. ஆகியோர் அவசரமாக டெல்லி சென்றனர். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திரசிங், நிர்மலா சீதாராமன், டாக்டர் தமிழிசை, இல.கணேசன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.

    அப்போது நீட் தேர்வு எதிர்ப்புக்கான காரணங்கள், தமிழக மாணவர்களின் நிலைமை, பற்றி விவாதித்தனர். மேலும் சட்டப்பூர்வமான சாதக, பாதகங்கள், தற்காலிக விலக்கு அளித்தால் என்ன ஆகும்? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவாதித்தனர்.

    தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது பற்றி இன்னும் ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×