search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் வாழ்க்கையில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    விவசாயிகள் வாழ்க்கையில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    எதிர்க்கட்சியினர் விவசாயிகள் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    திருவண்ணாமலை:

    எதிர்க்கட்சியினர் விவசாயிகள் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    திருவண்ணாமலையில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

    நான் ஒவ்வொரு முறை பிரதமரை நேரில் சந்திக்கும்போதும், தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஜெயலலிதாவின் அரசு மாணவர்களின் நலன் காக்கும் அரசு.

    குடிமராமத்துத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்து 1,519 ஏரிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு அந்த ஏரிகளில் இருக்கிற வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளுவதற்கு அனுமதி அளித்து வருகிறது. இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக ரூ.300 கோடி நாங்கள் அளித்தோம். அதற்காக 2,065 ஏரிகளை தேர்வு செய்து, இந்த பணி விரைவாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நான் 13.3.2017 அன்று காஞ்சீபுரம் மணிமங்கலத்தில் ஏரி குடிமராமத்து பணியை முதன் முதலாக தொடங்கி வைத்தேன். 55 நாள் கழித்து, எதிர்க்கட்சி தலைவர் 7.5.2017 அன்று சென்னை சைதாப்பேட்டை கோதண்டராமர் கோவில் குளத்தில் தூர்வாரினார். எல்லோரும் ஏரி, குளங்களில் தூர்வாருவார்கள். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கோவில் குளத்தில் தூர்வாரினார்.

    இந்த கோவில் குளம் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. அப்போது எல்லாம் அவருக்கு கண் தெரியவில்லை. நான் தூர்வாரியதையொட்டி, இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று எண்ணி, கோவில் குளத்தை தூர்வாரினார். சரி, அதுவும் நல்லது தான். ஏனென்றால், கோவில் குளத்தை தூர்வாருவதால் புண்ணியம் கிடைக்கும் என்று யாரோ சொல்லியிருப்பார் கள். அதனால் தான், கோவில் குளத்தில் சென்று, புண்ணியம் தேடுவதற்காக அந்த பணியை செய்திருப்பார் என்று நான் கருதுகிறேன்.

    அதற்குப் பிறகு, இப்பொழுது என்னுடைய தொகுதிக்கு போய்விட்டார். தமிழகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய துறைக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் 40 ஆயிரத்துக்கு மேல் இருக்கின்றன. இத்தனை குளங்களிலும் ஒரே நேரத்தில் தூர்வாருவது என்பது இயலாத காரியம்.

    படிப்படியாக திட்டமிட்டு அரசு அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. ஆனால் அவர்கள் வேண்டுமென்றே, எந்த அனுமதியும் பெறாமல், குளத்திற்கு சென்று மண்ணை அள்ளுவது எப்படி நியாயம் ஆகும்? இது அரசாங்கத்தினுடைய சொத்து. ஏரி, குளத்தை தூர்வார வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

    ஏற்கனவே எங்கள் பகுதி விவசாயிகளால் தூர்வாரி முடிக்கப்பட்ட கச்சராயன் குட்டையில் தூர்வார வருகிறார், பார்வையிட வருகிறார் என்று அரசியல் செய்வதற்கு என்று எவ்வளவோ இடங்கள் உள்ளன. எனவே, விவசாயிகளின் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரை நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×