search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கல்லூரி சேர்க்கை: புதுவை மாணவர்கள் நன்மைக்காகவே கவுன்சிலிங்கை நிறுத்தி உள்ளோம் -  நாராயணசாமி
    X

    மருத்துவ கல்லூரி சேர்க்கை: புதுவை மாணவர்கள் நன்மைக்காகவே கவுன்சிலிங்கை நிறுத்தி உள்ளோம் - நாராயணசாமி

    மருத்துவ கல்லூரி சேர்க்கையில் புதுவை மாணவர்கள் நன்மைக்காகவே கவுன்சிலிங்கை நிறுத்தி உள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கமிட்டி அறையில் இன்று நிருபர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    2 நாட்களுக்கு முன்பு ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்ததையடுத்து டெல்லி சென்றேன்.

    விழாவில் கலந்து கொண்ட போது பல மத்திய மந்திரிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதுவை மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து ஏற்கனவே அனுப்பிய சட்டவரையரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    புதுவை மாநிலத்தில் உள்ள மாணவ-மாணவிகள் தமிழ்நாடு பாடதிட்டத்தின் கீழ் படித்து வருவதால் சி.பி.எஸ்.சி. முறையில் மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் எழுதும் நேரத்தில் அவர்களுக்கு இணையாக வெற்றிபெறுவது கடினம். அதனால் மாணவ- மாணவிகளை சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட முறைக்கு மாற்றி கொண்டுவரும் வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தும் பதில் வரவில்லை.

    சட்டத்துறையோடு கலந்து பேசி விலக்கு அளிக்க பரிசீலனை செய்வதாக மத்திய மந்திரி கூறினார். மத்திய மருத்துவ கவுன்சில் இருந்து கலந்தாயய்வு நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

    அதன்படி ஏற்கனவே கலந்தாய்வு முடித்துள்ளோம். புதுவை மாநிலத்தில் தமிழக அரசு கலந்தாய்வு நடத்தாமல் நாம் மட்டும் நடத்தினால் பல்வேறு பிரச்சினைகள் வரும். எனவே, நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கலந்தாய்வு ஒத்தி வைத்துள்ளோம்.

    நமது மாணவ- மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கவுன்சிலிங்கை ஒத்தி வைத்துள்ளோம். மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

    உடனடியாக கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று ஒருசிலர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முடிவு நமக்கு சாதகமாக இருந்தால் நீட்டில் இருந்து விலக்கு கிடைக்கும். இல்லையென்றால் அமைச்சர்கள் ஒன்றுகூடி பேசி முடிவு எடுப்போம்.

    50 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமாக கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து சட்டத்தில் ஆராய வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து கடந்த ஆண்டை விட அதிகமாக சீட் பெற்றுள்ளோம். இந்த வருடத்தில் 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது. நிகர்நிலை பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அமைச்சரவையில் முடிவு செய்து மாநில அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×