search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்: ஒகேனக்கல்லில் இன்று தொடங்குகிறார்
    X

    அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்: ஒகேனக்கல்லில் இன்று தொடங்குகிறார்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஒகேனக்கல்லில் இன்று தொடங்குகிறார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை(இன்று) காலை 9 மணிக்கு ஒகேனக்கல்லில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கி 30-ந் தேதி பூம்புகாரில் நிறைவு செய்கிறேன்.

    உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க., தி.மு.க. திட்டமிட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. எனவே அப்பகுதிகளை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசு அமைக்க வேண்டும்.

    நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள மணல்குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. எனினும் நடவடிக்கை எடுக்காத நாகை, கடலூர் கலெக்டர் மீது பா.ம.க. சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது, மிகப்பெரிய மோசடி திட்டம். இத்திட்டத்துக்கு தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கடந்த 2012-ம் ஆண்டு அனுமதி கொடுத்து இருக்கிறார்.

    திராவிட கட்சிகளால் கடந்த 50 ஆண்டுகள் காவிரி பிரச்சினையில் உரிமையை இழந்துவிட்டோம். இனியும் உரிமையை இழக்கக்கூடாது. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே என்னுடைய பிரசார பயணத்தின் நோக்கம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘கரம் கோர்ப்போம்-காவிரி காப்போம்’ என்ற பிரசார விழிப்புணர்வு பயணத்தின் கையேடு நூலினை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டார். அதனை ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் என்பவரும், பெண் துப்புரவு தொழிலாளி காளி அம்மாள் என்பவரும் பெற்றுக்கொண்டனர். 
    Next Story
    ×