search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்மழை, காற்று காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்தன: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    X

    தொடர்மழை, காற்று காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்தன: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    ஊட்டியில் பெய்த தொடர்மழை, காற்று காரணமாக, ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    மலைகளின் அரசியான ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஊட்டி ரோஜா பூங்கா சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக உள்ளது.

    இந்த பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. அந்த செடிகளில் சிவப்பு, மஞ்சள், நீலம் உள்பட பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களின் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. பலத்த காற்று வீசியது. இதனால் ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் உதிர்ந்து வருகின்றன. மேலும் கடந்த வாரம் பெய்த மழையால் ரோஜா செடிகளில் பூத்திருந்த மலர்கள் அழுகின.

    குறிப்பாக ரோஜா செடிகளில் உள்ள இதழ்கள் உதிர்வதுடன், செடிகளில் புதிதாக வரும் மொட்டுகள் மலர முடியாமல் போகிறது. அதோடு செடிகளில் உள்ள இலைகளும் உதிர்ந்து வருகின்றன. பூங்காவில் உள்ள அழுகிய மற்றும் உதிர்ந்த மலர்களை அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    ரோஜா மலர்கள் உள்ள செடிகளில் இருந்து மலர்கள் உதிர்ந்து காணப்படுவதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்த ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்து வருவது வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
    Next Story
    ×