search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
    X

    ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு எதிராக தி.மு.க. அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
    சென்னை:

    ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு எதிராக தி.மு.க. அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    சென்னை ஐகோர்ட்டில், நங்கநல்லூரை சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது.



    ‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த தேர்வு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தை நடத்தவுள்ளது. எனவே, இந்த போராட்டத்துக்கு தடைவிதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு மனுதாரர் வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று காலையில் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

    அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆஜராகி, ‘தி.மு.க. நடத்தும் போராட்டம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த போராட்டத்துக்கு தடைவிதிக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘அமைதியான முறையில், சட்டம்-ஒழுங்கிற்கு பிரச்சினை இல்லாமல் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமையாக இருக்கும்போது, அதில் எப்படி இந்த ஐகோர்ட்டு தலையிட முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு மனுதாரர் வக்கீல், ‘நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்த முடியுமா?’ என்று கேட்டார். ‘கண்டிப்பாக போராட்டம் நடத்த முடியாது. அதேநேரம், நீதிமன்ற தீர்ப்புகளை உள்நோக்கம் இல்லாமல், விமர்சிக்கலாம்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சி.மணிசங்கர், ‘தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்க மறுத்து சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளார். அதனால், இந்த போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை’ என்று கூறினார்.

    இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், ‘மனித சங்கிலி போராட்டத்துக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார். இதுதொடர்பாக கடந்த 25-ந் தேதி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது குறித்து நடவடிக்கை எடுப்பது போலீசாரின் கடமையாகும். எனவே, இந்த சூழ்நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது’ என்று உத்தரவிட்டனர். 
    Next Story
    ×