search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அமைச்சர்களுடன் கவர்னர் கிரண்பேடி திடீர் ஆலோசனை
    X

    புதுவை அமைச்சர்களுடன் கவர்னர் கிரண்பேடி திடீர் ஆலோசனை

    புதுவை அமைச்சர்கள் 3 பேரிடம் கவர்னர் கிரண்பேடி தனித்தனியாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள கார்கில் போர் வீரர் நினைவு சின்னத்தில் கவர்னர் கிரண்பேடி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலகண்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து குரூப் போட்டோ எடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர்கள் அருகில் கவர்னர் கிரண்பேடி சென்று பேசினார். அமைச்சர்கள் 3 பேரிடமும் கவர்னர் தனித்தனியே பேசினார். அமைச்சர் கமலகண்ணனிடம் பேசும்போது, சென்டாக் கமிட்டி தேசிய விருது பெற்ற கல்வியாளர்களை நியமியுங்கள். அப்போதுதான் தவறுகள் நடைபெறாமல் இருக்கும். எதிர்காலத்தில் நடைபெறும் தவறுகளையும் களைய வழி செய்யும். அடுத்த கல்வியாண்டில் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்துங்கள். அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்றார்.

    அமைச்சர் ஷாஜகானிடம் பேசும்போது, சுற்றுலாத்துறையின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. ஆனால் உங்கள் வசம் உள்ள போக்குவரத்துத்துறை செயல்பாடுகள் சரியில்லை. அங்கு தனியாக மேலாண் இயக்குனரை நியமித்து போக்குவரத்து துறை செயல்பாடுகளை சீரமையுங்கள் என்றார்.

    அமைச்சர் நமச்சிவாயத்திடம் பேசும்போது, குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்கில் குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது, மின்சாரம் தயாரிப்பது போன்றவை செயல்படாமல் உள்ளது. இதை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் துறை ரீதியாக எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தன்னை நேரில் அணுகும்படி கேட்டுக்கொண்டார்.

    பின்னர் அமைச்சர்களிடம் கவர்னர் விடைபெற்றுச்சென்றார். அங்கிருந்த டி.ஜி.பி. சுனில்குமார்கவுதமிடம் கார்கில் நினைவு சின்னத்தில் தினந்தோறும் மலர்களால் அலங்கரிக்கும்படியும், அதற்கான பொறுப்பை காவல்துறை ஏற்க வேண்டும் என்றும் கவர்னர் கேட்டுக்கொண்டார். இதன்பின் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

    வருகிற 30-ந்தேதி புதுவையில் உள்ள அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக மத்திய உள்துறை மந்திரி, எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து கவர்னருக்கு எதிராக புகார்கூற திட்டமிட்டுள்ளனர். இத்தகைய சூழலில் கவர்னர் அமைச்சர்களிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×