search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினா டி.ஜி.பி. அலுவலகத்தில் குட்கா ஊழல் பேனர் கட்டியவர் கைது
    X

    மெரினா டி.ஜி.பி. அலுவலகத்தில் குட்கா ஊழல் பேனர் கட்டியவர் கைது

    மெரினா கடற்கரை டி.ஜி.பி. அலுவலகத்தில் நுழைந்த வாலிபர் திடீரென குட்கா ஊழல் குறித்து பேனர் ஒன்று கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெட்ட வெளிச்சமானது.

    செங்குன்றத்தில் உள்ள ஒரு குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் போலீஸ் அதிகாரிகள் பலரது பெயர் இடம்பெற்றிருந்தது.

    யார்-யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்களும் இருந்தது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பெயரும் அதில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்ய கோரி மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மெரினா கடற்கரை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று வாலிபர் ஒருவர் திடீரென பேனர் ஒன்றை கட்டினார். இதில் குட்கா வேர் அவுஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டி.ஜி.பி. ராஜேந்திரனின் படமும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

    டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் செல்வதற்கு 4 வாசல்கள் உள்ளன. மெரினா காமராஜர் சாலையில் பொது மக்கள் செல்லும் மெயின் நுழைவு வாயில் உள்ளது. அதே சாலையில் இருக்கும் இன்னொரு வாசல் எப்போதும் மூடப்பட்டிருக்கும்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2 வாசல்கள் உள்ளன. இதில் ஒரு வாசல் வழியாக அதிகாரிகளின் வாகனங்கள் செல்லும். தீயணைப்பு நிலையம் அருகே உள்ள வாசலில் பொதுமக்கள் செல்வார்கள்.

    குட்கா பேனரை மூடிய வாசல் அருகே கட்டிய வாலிபர் கோ‌ஷம் எழுப்ப தொடங்கினார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். மெரினா போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த வாலிபரின் பெயர் செந்தில்முருகன். மதுரையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் சமூக ஆர்வலர் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டார்.

    இதுபற்றி செந்தில்முருகன் கூறும்போது, கடந்த 20-ந் தேதி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் டி.ஜி.பி. மீது புகார் அளித்திருந்தேன். அதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று போராட்டம் நடத்தினேன் என்று தெரிவித்தார்.

    செந்தில்முருகன் நடத்திய இந்த திடீர் போராட்டம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×