search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு - ஜல்லிக்கட்டு போல் அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு?
    X

    நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு - ஜல்லிக்கட்டு போல் அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு?

    ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததுபோல் நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு நடத்தாமல் மாநிலக் கல்வியில் அதிக மதிப்பெண் பெறுகிறவர்களின் வரிசைப்படி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    தமிழக மாணவர்கள் அதற்கு தயார் ஆகாததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த போது பிப்ரவரி 1-ந்தேதி சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டதால் தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரிகளைத் தொடர்பு கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் திட்டமிட்டபடி தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், நெல்லை ஆகிய நகரங்களில் 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    நாடு முழுவதும் 6 லட் சத்து 11 ஆயிரத்து 739 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். அதில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை.

    நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவும், தமிழகம் மேற்கு வங்க மாநிலத்தில்தான் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள்களை பயன்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. திமு.க. சார்பில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

    இதனால் மீண்டும் தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் நிரந்தர விலக்கு கேட்டதால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால்தான் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

    தற்போது தற்காலிகமாக விலக்கு கோரும் வகையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்ற மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. அதற்கு அவகாசம் இல்லாததால் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

    ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததுபோல் நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியும் கவர்னரின் ஒப்புதலும் அவசியம் என்பதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    பிரதமர் மோடி தமிழகத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 1 ஆண்டு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு மாநில கவர்னர் அனுமதியுடன் மத்திய அரசுக்கு அனுப்பும்.

    மத்திய அரசு அந்த சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். ஜனாதிபதி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததும் 1 ஆண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவசர சட்டம் நிறைவேறினால் மீண்டும் பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும்.

    Next Story
    ×