search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் பேரழிவை பற்றி தெரியாமல் அமைச்சர் ஒப்புதல் அளிப்பதா?: ராமதாஸ் கண்டனம்
    X

    பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் பேரழிவை பற்றி தெரியாமல் அமைச்சர் ஒப்புதல் அளிப்பதா?: ராமதாஸ் கண்டனம்

    பெட்ரோக் கெமிக்கல்ஸ் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் அதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்திருப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு அமைச்சர்கள் எந்த அளவுக்கு திறமையற்றவர்களாகவும், மக்கள் நலனில் அக்கறையற்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்கும் பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் என்ன நோக்கத்திற்காக அமைக்கப்படுகிறது என்பது, அதற்கு அனுமதி அளித்த அமைச்சருக்கே தெரியாமல் இருப்பது தான். இத்தகைய பொறுப்பற்ற தன்மை கண்டிக்கத்தக்கது.

    கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதாக தமிழக அரசின் அரசிதழில் கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து அப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.

    45 கிராமங்கள் பெட்ரோக் கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றில் உள்ள 57,345 ஏக்கர் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நகரியத்தை நிர்வகிக்க உறுப்பினர்-செயலர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்படவுள்ள பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோக் கெமிக்கல் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் உறுப்பினர் செயலரே அனுமதி அளிப்பார் என்றும் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

    நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலியம் மற்றும் ரசாயனக் காடுகளாக மாற்றும் தொழில்களுக்கு அனுமதி அளிப்பதில் தமிழக அரசு எவ்வளவு வேகம் காட்டுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ள முடியும். இப்பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடாவிட்டால் நாம் உறங்கி எழுவதற்குள் மொத்த மாவட்டத்தையும் தமிழக அரசு அழித்துவிடக்கூடும்.



    பெட்ரோக் கெமிக்கல் திட்டத்திற்கு பா.ம.க. கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து ஒரு ஆங்கில நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ‘‘பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் ஆய்வு செய்வேன்.

    அதன்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சருடன் நான் விவாதிப்பேன். கடலூர், நாகை மாவட்டங்களில் வாழும் 45 லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் குறித்து அமைச்சருக்கு எதுவும் தெரியவில்லை.

    தற்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தான் நிலம் ஒதுக்கீட்டுக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் நினைத்தால் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய முடியும். ஆனால், அவரோ இத்திட்டத்தின் நோக்கமே தெரியாது என்கிறார்.

    பெட்ரோக் கெமிக்கல்ஸ் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் அதற்கு அமைச்சர் எப்படி அனுமதி கொடுத்தார்? அவரது அனுமதியுடன் தான் இத்திட்டத்திற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதா? அல்லது அவருக்கே தெரியாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா? என்பதை அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும்.

    பெட்ரோக் கெமிக்கல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களுமே முப்போகம் விளையும் வளமான நிலங்கள் ஆகும். பெட்ரோக் கெமிக்கல் திட்டத்தால் இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறுவதை அனுமதிக்க முடியாது. என்ன விலை கொடுத்தாவது இத்திட்டத்தை பா.ம.க. தடுத்து நிறுத்தும்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களை பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரும் 5ஆம் தேதி சனிக்கிழமை சந்தித்து பேசவுள்ளார். 5-ஆம் தேதி காலை கடலூர் மாவட்ட மக்களையும், மாலை நாகை மாவட்ட மக்களையும் அவர் சந்தித்து பெட்ரோக்கெமிக்கல் திட்டம் குறித்து பேசவுள்ளார். இம்மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது இந்த பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீர்மானிக்கப்படும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×