search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் நாளை நினைவிடம் திறப்பு: மோடியுடன் 5 கோடி மாணவர்கள் அப்துல்கலாம் பாடலை பாடுகிறார்கள்
    X

    ராமேசுவரத்தில் நாளை நினைவிடம் திறப்பு: மோடியுடன் 5 கோடி மாணவர்கள் அப்துல்கலாம் பாடலை பாடுகிறார்கள்

    ராமேசுவரத்தில் நாளை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்ததும் அவருடன் சேர்ந்து 5 கோடி பேர் அப்துல்கலாம் கீதத்தை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று புகழப்படும் அப்துல்கலாம், நாட்டின் பதினோராவது ஜனாதிபதியாக 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

    2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும் உருவெடுப்பதற்கு அவர் வகுத்து கொடுத்த திட்டம் உலகப் புகழ் பெற்றது. அவர் மேற்கொண்ட அணு ஆயுத திட்டம் கண்டு உலகமே வியந்தது.

    அறிவியல், தொழில்நுட்பத்துறைகளில் மட்டுமின்றி மாணவர் சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது. நாடெங்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று 5 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து ஊக்குவித்த சிறப்பு அவருக்கு உண்டு.



    ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் மாணவர்களுக்காக ஓடி ஓடி உழைத்தார். இடை விடா பணி காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மேகாலயா மாநிலத்துக்கு சென்றிருந்தபோது மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேசுவரத்தில் அடக்கம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

    அப்துல்கலாமின் சேவையை போற்றும் வகையில் அங்கு ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவு சார்மையமும் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ராமேசுவரம் பேக்கரும்பில் மணி மண்டபத்துக்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது.

    தற்போது அப்துல்கலாம் தேசிய நினைவகத்தின் பணிகள் முதல் கட்டமாக முடிந்து விட்டன. ரூ.15 கோடியில் மணி மண்டபமும், ரூ.10 கோடியில் மற்ற பணிகளும் ஆக ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக அப்துல் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள் கொண்ட நூலகம், அறிவுசார் மையம், கோளரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

    தற்போது கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் நினைவகம், மணிமண்டபம் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அப்துல்கலாம் இந்திய விண்வெளி ஆய்வு துறைக்கு செய்துள்ள நிகரற்ற சேவையை உணர்த்தும் வகையில் நினைவகத்தின் ஒரு பகுதியில் அக்னி ஏவுகணை மாதிரி நிறுத்தப்பட்டுள்ளது.

    மணிமண்டபத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை காட்டும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாமின் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

    அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (27-ந்தேதி) இந்த மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் மண்டபம் சென்று காரில் ராமேசுவரம் பேக்கரும்புக்கு செல்கிறார்.

    அப்துல்கலாம் மணி மண்டபத்துக்கு வரும் பிரதமர் மோடி அங்கே அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.



    அப்துல்கலாம் மணி மண்டபத்தை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறக்கும் போது ‘கலாம் பாடல்’ பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கலாம் சலாம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாடல் மூன்று நிமிடங்கள் பாடக் கூடியதாகும். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

    சென்னையில் சமீபத்தில் நடந்த விழாவில் “கலாம் சலாம்“ பாடலை பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வெளியிட்டார். இந்த பாடல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மாற்றம் செய்து பாடப்பட்டுள்ளது. தெலுங்கு கலாம் சலாம் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி உள்ளார்.

    அப்துல்கலாம் நினைவகத்தை மோடி திறந்ததும் நாடு முழுவதும் உள்ள மாணவ - மாணவிகள் “கலாம் சலாம்” பாடலை பாடுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5 கோடி மாணவர்கள் இந்த பாடலை ஒரே நேரத்தில் பாடுவார்கள். அதாவது நினைவகம் திறக்கப்படும் 11 மணி முதல் 11.03 மணி வரை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் தமிழில் “கலாம் சலாம்” பாடலை பாடுவார்கள். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தெலுங்கில் பாடுவார்கள். மற்ற மாநில மாணவர்கள் இந்தியில் அந்த பாடலைப் பாடுவார்கள்.

    அதன்பிறகு ராமேசுவரம் முதல் டெல்லி வரை செல்ல உள்ள அப்துல்கலாம் 2020 என்ற சாதனை பிரசார வாகனத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து மண்டபம் முகாம் அருகே கடலோர காவல் படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு 11.55 மணிக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசுகிறார்.

    மேலும் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி கடற்கரை வரை ரூ.10 கோடி செலவில் போடப்பட்டு உள்ள புதிய சாலையையும் மோடி திறந்து வைக்கிறார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் வெங்கையா நாயுடு, அன்வர்ராஜா, பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



    ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பேக்கரும்பு அருகில் உள்ள பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை துணை ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கடலோர காவல் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பிரதமர் நிகழ்ச்சி மற்றும் ஆடித்திரு விழாவை யொட்டி ராமேசுவரம் கோவில் நடை சாத்தப்பட இருப்பதாலும் இன்றும் (26-ந்தேதி), நாளையும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வெளியூர் மக்கள் ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலை மார்க்கமாக பயணம் செய்வதை தவிர்க்குமாறு மாவட்ட போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணை கமாண்டோ எம்.என்.ஷா தலைமையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்கின்றனர்.

    இதற்காக கவர்னரும், முதல்வரும் இன்று (புதன் கிழமை) விமானம் மூலம் மதுரை வருகின்றனர். பின்னர் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர்.
    Next Story
    ×