search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு: காஞ்சீபுரத்தில் பட்டுச்சேலை கடைகள் அடைப்பு
    X

    ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு: காஞ்சீபுரத்தில் பட்டுச்சேலை கடைகள் அடைப்பு

    ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டதால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம்:

    மத்திய அரசு பட்டுச் சேலைகள் மீது 5 சதவீதமும், பட்டுச் சேலை தயாரிப்பிற்கு பயன்படும் மூலப் பொருளான கோறாவிற்கு 5 சதவீ தமும், தூய ஜரிகைக்கு 12 சதவீதம் என தற்போது 22 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது.

    இதற்கு முன்பு வரிவிதிப்பு ஏதும் இல்லாத நிலையில் தற்போது 22 சதவீதம் புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரி விதிப்பினை கண்டித்து காஞ்சீபுரத்தில் இன்று தனியார் பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பட்டுச் சேலை எடுக்க வந்த வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

    நகரம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியாருக்குச் சொந்தமான பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டதால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    தனியார் பட்டுச் சேலை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஒய்.எம்.நாராயணசாமி தலைமையில் பட்டுச் சேலை விற்பனையாளர்கள் ஏராளமானோர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை திரும்பப் பெற வலியுறுத்தி காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடியில் இருந்து மூங்கல் மண்டபம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    இதில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். போராட்டம் குறித்து தனியார் பட்டுச் சேலை விற்பனையாளர் கூறியதாவது:-

    ஏற்கனவே நெசவுத் தொழில் மிகவும் நசிந்து போய் உள்ளது. இதற்கு முன்னர் பட்டுச் சேலைகளுக்கோ அதனை தயாரிக்க பயன்படும் கோரா, ஜரிகை போன்றவற்றிற்கோ வரி ஏதும் இல்லாது இருந்தது,

    தற்போது மத்திய அரசு 22 சதவீதத்தினை ஜி.எஸ்.டி. வரியாக விதித்துள்ளது. இது நெசவுத் தொழிலின் அழிவிற்கே வழிவகுக்கும். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த வரிவிதிப்பினை திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    காமாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள கோமதி சில்க்ஸ் உரிமையாளர் தாமோதரன் கூறும் போது, “நகருக்கு உலகபுகழ் சேர்க்கும் காஞ்சீபுரம் பட்டு சேலைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பெருமளவிலான விற்பனை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கடையில் பணிசெய்யும் பல்லாயிரக்கணக்கானோர் விற்பனை குறைவினால் கடும் பாதிப்பு அடைவர்.

    எனவே பல்வேறு விதங்களிலும் இன்னல்களை விளைவிக்கும் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

    Next Story
    ×